For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாக்கி மெடல் "பெருமையே".. அதற்கு ஏன் உலகக் கோப்பைகளை மறக்கணும்? - கம்பீருக்கு ஒரு ரசிகனின் பதில்

மும்பை: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வென்ற வெண்கலப்பதக்கம், இந்திய கிரிக்கெட் அணி வென்ற உலகக் கோப்பைகளை விட மிகப் பெரியது என பலரும் சமூக தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருவதை காண முடிகிறது.

இந்த விவாதங்களுக்கு விதையைத் தூவியவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் எம்.பி.யுமான கவுதம் கம்பீர். அவர் தனது ட்விட்டரில், 1983, 2007, 2011ல் வென்ற கிரிக்கெட் உலகக் கோப்பைகளை விட, ஹாக்கி அணி வெண்கலம் வென்றது பெரியது என்ற தொனியில் ட்வீட் செய்திருந்தார்.

இந்த தொனி, தோனி மீதான காழ்ப்புணர்ச்சியில் வந்ததா, அல்லது கிரிக்கெட் மீதான வெறுப்பில் வந்ததா? என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அவர் அப்படி சொல்லியிருப்பது தான் இன்றைய ஹாட் டாபிக்.

 சாதாரண அணி

சாதாரண அணி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, நேற்று (ஆக.5) நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 5- 4 என்று வீழ்த்தி மெடலை கைப்பற்றியது. இந்த மெடல் என்பது 41 ஆண்டுகால கனவு இந்தியாவுக்கு. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் அணி ஹாக்கியில் தங்கம் வென்றது. அதன்பின் இப்போதுதான் மீண்டும் பதக்கம் வெல்கிறது. இந்திய அணியின் கேப்டனாக தயான் சந்த் இருந்தவரையில் பொற்காலம் தான். ஒலிம்பிக்கில் இந்தியா களமிறங்கினால் எதிரணிகள் மிரளும். ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில், 8 முறை தங்கம் வென்ற அணி இந்தியா என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஜாம்பவான்கள் நாம். ஆனால், 80க்கு பிறகு இந்திய அணியால் ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை. ஆசிய லெவலில் இந்திய ஹாக்கி அணி வலிமையான அணியாக இருந்தாலும், சர்வதேச அளவிலான களத்துக்கு வந்துவிட்டால் சாதாரண அணி தான்.

 அங்கீகாரம்

அங்கீகாரம்

அப்படிப்பட்ட பெயருடன் வலம் வந்த இந்தியா, இப்போது மீண்டும் தனது ஒலிம்பிக் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. "நாங்கள் கடைசி வரை போராடுவோம்" என்ற பெயரையும், "அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிட மாட்டோம்" என்பதையும் மிக அழுத்தமாக உலக அணிகள் மத்தியில் விதைத்திருக்கிறது இந்திய ஹாக்கி அணி. அதுவும் 41 வருடங்கள் கழித்து. வேதனைகள், ஏமாற்றங்கள், தோல்விகள், விமர்சனங்கள் என இந்த 40 வருட காலக்கட்டத்தில் இந்திய ஹாக்கி சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது. அத்தனைக்கும் இந்த டோக்கியோ விடை கொடுத்திருக்கிறது. அந்த வகையில், இந்த வெற்றி என்பது இந்திய தேசத்திற்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம், கெளரவம், மரியாதை, அந்தஸ்து எனலாம். அப்படியெனில், கெளதம் கம்பீர் கூறியது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி தான்.

 ஒர்த் இல்லை என்கிறாரா?

ஒர்த் இல்லை என்கிறாரா?

அதேசமயம், ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற வெற்றியை, இந்தியா அடைந்த சாதனையை, அதே இந்திய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் கிரிக்கெட் அணியுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது சரியானதா? என்பதே கேள்வி. அவர் (கம்பீர்) 1983, 2007, 2011 உலகக் கோப்பைகளை மறந்துவிடுங்கள் என்று சொல்கிறார். அதைச் சொல்லி, எந்த உலகக் கோப்பைகளையும் விட ஹாக்கியின் இந்த மெடல் பெரியது என்கிறார். ஹாக்கி மெடல் வென்றது பெருமைக்குரிய ஒன்றுதான் என்பதை ஆயிரம் முறையானாலும் யாரும் மறுக்கவே முடியாது. அதற்காக, இந்தியா கிரிக்கெட்டில் வென்ற உலகக் கோப்பைகளை ஏன் மறக்க வேண்டும்? ஒவ்வொரு இந்தியனும் நாட்டை நினைத்து எண்ணி பெருமைப்படும் அளவுக்கு அந்த உலகக் கோப்பைகள் ஒர்த் இல்லை என்கிறாரா கம்பீர்?

 கபில் தேவ் அர்ப்பணிப்பு

கபில் தேவ் அர்ப்பணிப்பு

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என்று ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளிடையே, இந்தியா எனும் நாட்டைப் பற்றி ஒட்டுமொத்த உலகத்தையுமே பேச வைத்த, வியக்க வைத்த, மிரள வைத்த 1983 உலகக் கோப்பையை எப்படி மறக்க முடியும்? ஆங்கிலமே தெரியாமல், தாய் மொழியிலேயே பேசி பேசி வீரர்களை ஊக்குவித்து, அணியை ஒருங்கிணைத்து, உலக சாம்பியன் அணிகளை தோற்கடித்து இந்தியா கைகளில் உலகக் கோப்பை ஏந்தச் செய்த கபில் தேவின் அர்ப்பணிப்பை எப்படி மறக்க முடியும்?

 செய்து காட்டிய தோனி

செய்து காட்டிய தோனி

இந்த அபார, நம்ப முடியாத வெற்றிக்கு பிறகு, 28 ஆண்டுகள் கழித்து, மீண்டும் உலக சாம்பியன் அணிகளை வீழ்த்தி, பல்வேறு போராட்டங்களுக்கும், 100 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் விடை தரும் தருணமாக 2011ல் உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த தோனியின் அர்ப்பணிப்பை எப்படி மறக்க முடியும்? இதை கம்பீர் ஏன் யோசிக்கவில்லை என்பதே பலரது கேள்வி. சிலர் இதற்கு "அவருக்கு தோனி மீது காண்டு.. அவரை வெறுப்பேற்றவே கம்பீர் இப்படி தெரிவித்துள்ளார்" என்று கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. அப்படியெனில், அவர் கபில் தேவ் வென்ற உலகக் கோப்பையையும் தான் குறிப்பிட்டிருக்கிறார். அதற்காக அவர் கபில் மீதும் காண்டில் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியுமா என்ன? இல்லை. அவர் முழுக்க முழுக்க, ஹாக்கி அணி மெடல் வென்ற மகிழ்ச்சியில், ஒரு உணர்ச்சிப்பெருக்கில் தான் அப்படி பதிவிட்டிருக்க வேண்டும். தவிர, அவர் நினைத்தால் தனது கருத்துக்கு நியாயம் கற்பிக்கவும் முடியும்.

 ஆற்றாமை

ஆற்றாமை

ஆம்! கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் செலவிடப்படும் தொகையில் பாதியளவு மற்ற அனைத்து விளையாட்டுக்கும் செலவு செய்தாலே, இந்தியா ஒலிம்பிக்கில் குறைந்தது 20 தங்கமாவது ஜெயித்துவிட்டு தான் திரும்பும். அத்தனை ஆயிரம் கோடிகள் கிரிக்கெட்டில் வாரி இரைக்கப்படுகிறது. கிரிக்கெட் என்ற பிஸ்னஸ் அத்தகைய பெரியது என்பது உண்மை தான். அதற்காக, மற்ற விளையாட்டுகளுக்கு குறைவாக நிதி ஒதுக்க வேண்டும் என்று ஒன்றுமில்லையே. அந்த ஆற்றாமையின் வெளிப்பாடாக கூட கம்பீர் அவ்வாறு தெரிவித்திருக்கலாம்.

 ஹாக்கியும் முக்கியம்

ஹாக்கியும் முக்கியம்

எது எப்படியோ.. இனி வரும் காலங்களில் கிரிக்கெட்டுக்கு தரப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு தரப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். அதற்காக, கம்பீர் சொல்வது போல், கிரிக்கெட் உலகக் கோப்பைகளை மறந்துவிடலாம் முடியாது. ஏனெனில், அந்த கோப்பைகளும் நமது அடையாளங்களே!.

Story first published: Friday, August 6, 2021, 20:58 [IST]
Other articles published on Aug 6, 2021
English summary
gambhir's hockey team olympic victory comparison - ஒலிம்பிக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+