நீ பாட்டுக்குத் திட்டிட்டே இரு ஜேம்ஸு.. மூட்டி விடும் மைக்கேல் வாகன்!
மான்செஸ்டர்: இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிறுத்தக் கூடாது. தொடர வேண்டும் என்று எரிகிற கொள்ளியில் சற்று பெட்ரோலை ஊற்றி ஊதியும் விட்டுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.
ஜடேஜா விவகாரத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் செய்தது சரியே என்றும் இவர் நியாயம் கற்பித்துள்ளார். ஆண்டர்சன் இதற்கெல்லாம் அஞ்சக் கூடாது என்றும் தொடர்ந்து ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியா புகார் செய்கிறதா, இல்லையா என்பது பற்றி ஆண்டர்சன் கவலைப்படக் கூடாது என்றும் தனது வேலையை அவர் தொடர வேண்டும் என்றும் வாகன் கூறியுள்ளார்.

ஜிம்மி ஜிம்மி.. கேரி கேரி!
இதுகுறித்து வாகன் கூறுகையில், ஜிம்மி (அதாங்க ஜேம்ஸ் ஆண்டர்சன்.. நம்மூரில் ஜிம்மின்னாலே வேற அர்த்தம் வரும்) தொடர்ந்து இந்தியர்களைச் சீண்ட வேண்டும். 4வது டெஸ்ட் போட்டியிலும் இது தொடர வேண்டும்.

அவர்தான் வெற்றிக்குக் காரணம்
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கும், சரிவிலிருந்து மீளுவதற்கும் ஜேம்ஸ்தான் பெரும் துணை புரிந்து வருகிறார். எனவே அவருக்கு இதுபோன்ற அரசியல் அழுத்தம் இருக்கக் கூடாது.

வேண்டும் என்றே குறி வைப்பார்கள்
ஏற்கனவே ஆண்டர்சனுக்கு எதிராக சூழல் உள்ளது. தற்போது அதைப் பெரிதாக்கி வேண்டும் என்றே அவரைக் குறி வைப்பார்கள். அதற்கு ஆண்டர்சனைப் பலிகடாவாக்கி விடக் கூடாது.

பார்த்துப் பேச வேண்டும்
அதேசமயம், ஆண்டர்சன் வார்த்தைகளைப் பார்த்துப் பேச வேண்டும். அவரது எதிர்கால விளையாட்டுக்குப் பாதகம் வந்து விடாத வகையில் தொடர்ந்து பேசலாம். தப்பில்லை.

ஸ்லெட்ஜிங்கில் தப்பே இல்லை
மற்றபடி ஸ்லெட்ஜிங்கில் தப்பே இல்லை. அது விளையாட்டின் ஒரு பகுதிதான். எல்லை தாண்டாத வரையில் ஸ்லெட்ஜிங் நல்லதே.

வேகப் பந்து வீச்சாளர்களுக்கு அவசியம் தேவை
குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஸ்லெட்ஜிங் அவசியம் தேவை. அப்போதுதான் அவர்களுக்கு உத்வேகம் கிடைக்கும். அடுத்தவரை தனிப்பட்ட முறையில் திட்டாமல் இதைச் செய்யும் வரை இதை நான் எதிர்க்க மாட்டேன் என்றார் வாகன்.


Click it and Unblock the Notifications