For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெயவர்த்தனேக்கள் அதிரடி-72 ஆண்டு சாதனை தகர்ந்தது!

By Staff
Mahela Jayawardene and Prasanna Jayawardene
அகமதாபாத்: இலங்கையின் அசாதாரணமான ரன் குவிப்பால் திணறிப் போயுள்ள இந்தியா, டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளது. 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் இன்று வேகமான ரன் குவிப்பில் இறங்கினர்.

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மறக்க முடியாத போட்டியாக மாறி விட்டது. இலங்கை வீரர்களின் பயங்கர ரன் குவிப்பு ஒருபக்கம், மஹளா ஜெயவர்த்தனே மற்றும் பிரசன்னா ஜெயவர்த்தனே ஆகிய இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 351 ரன்களைச் சேர்த்து 72 ஆண்டு காலமாக இருந்து வந்த சாதனையை முறியடித்தது மறுபக்கம் என இந்திய வீரர்கள் பொறி கலங்கிப் போயுள்ளனர்.

இரு ஜெயவர்த்தனேக்களும் அதிரடி ஆட்டத்தில் குதித்ததால் இந்தியா பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன்களைக் குவித்த இலங்கை ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

முன்னதாக 5 விக்கெட் இழப்புக்கு 591 என்ற மிகப் பெரிய ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை முடித்த இலங்கை இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனேவும், பிரசன்னா ஜெயவர்த்தனேவும் இன்றும் தொடர்ந்து ரன் குவித்து வந்தனர். இருவரும் சேர்ந்து ரன்களைக் குவித்ததால் இலங்கையின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்த ரன்குவிப்பின்போது கடந்த 72 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனை ஒன்றை இருவரும் தகர்த்தனர்.

கடந்த 1937ம் ஆண்டு டான் பிராட்மேன் மற்றும் ஜேக் பிங்கிள்டன் (ஆஸ்திரேலியா) ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான மெல்போர்ன்ட் டெஸ்ட் போட்டியின்போது 6வது விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்திருந்தது சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை இன்று முறியடித்தனர் இரு ஜெயவர்த்தனேக்களும்.

நேற்று இரட்டை சதம் போட்ட மஹளா ஜெயவர்த்தனே இன்று முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 275 ரன்கள் எடுத்த நிலையில் அவரது ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் அமீத் மிஸ்ரா.

இருப்பினும் பிரசன்னா தொடர்ந்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். அவரது பங்கு 154 ரன்களாகும்.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ஒரு இரட்டை சதம், இரு சதங்களைப் போட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் சங்கக்காரா.

இதையடுத்து இலங்கையை விட 334 ரன்கள் பின்தங்கிய நிலையில் கடினமான சூழலில் இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

கம்பீர் நிதானமாக ஆட, ஷேவாக் வழக்கம் போல எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆடினார். 67 பந்துகளைச் சந்தித்து 51 ரன்களில் வீழ்ந்தார் ஷேவாக்.

கம்பீர் மறு முனையில் நிதான நடை போட்டார். 120 பந்துகளைச் சந்தித்த அவர் 74 ரன்களுடன ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராகுல் டிராவிட் 38 ரன்களில் வீழ்ந்தார். 4ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்துள்ளது.

வேகமாக ஆடி 190 ரன்களை எடுத்ததன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி ஓரளவுக்கு தீர்ந்துள்ளது. இருப்பினும் இன்னும் அது ஐசியூவிலிருந்து வெளியே வரவில்லை.

நாளை ஒரு நாள் ஆட்டம் பாக்கி உள்ளது. இந்தியாவின் முன்பு இப்போது தோல்வி அல்லது டிரா என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

எனவே நாளைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+