காமன்வெல்த் 2026.. இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெண்கலம் வென்று சாதனை படைத்த ஜாண்டு குமார்
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா பவர்லிஃப்டிங் ஆண்கள் ஹெவிவெயிட் பிரிவில் இந்திய வீரர் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கான முதல் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆண்கள் ஹெவிவெயிட் பிரிவில் பி பிரிவில் களம் இறங்கிய ஜாண்டு குமார், தனது முதல் முயற்சியில் 181 கிலோ எடையையும், இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையையும் தூக்கி அசத்தினார். அவரது மூன்றாவது முயற்சியில் 196 கிலோ எடையைத் தூக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 72.4 கிலோ உடல் எடை கொண்ட ஜாண்டு குமார், 130.9 புள்ளிகள் பெற்று பி பிரிவில் முதலிடம் பிடித்தார்.

ஏ மற்றும் பி ஆகிய இரு பிரிவுகளின் புள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதிப் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நைஜீரியாவின் ரிலுவான் இட்ரிஸ் 132.8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், இங்கிலாந்தின் மேத்யூ ஹார்டிங் 131.0 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். வெறும் 0.1 புள்ளி வித்தியாசத்தில் இங்கிலாந்து வீரரிடம் வெள்ளியைத் தவறவிட்ட ஜாண்டு குமார், 130.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மலேசியாவின் நிக்கோடெமஸ் மோசஸ் 120.3 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்தார்.
இந்தப் போட்டியின் ஏ பிரிவில் களம் இறங்கிய மற்றொரு இந்திய வீரரான சுதிர், 182 கிலோ மற்றும் 183 கிலோ எடைகளை வெற்றிகரமாகத் தூக்கினார். ஆனால் 211 கிலோ எடையைத் தூக்க எடுத்த கடைசி முயற்சி தோல்வியடைந்ததால், அவர் 114.1 புள்ளிகளுடன் பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறினார். நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பதால், ஜாண்டு குமாருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
