சோனு சூட் உதவிய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை தற்கொலை.. 4 மாதங்களில் 4 தொடர் மரணங்கள் - பின்னணி என்ன
கொல்கத்தா: இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை கோனிகா லாயக் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பல்வேறு வழக்குகளை கிளர வைத்துள்ளது.
ஜார்க்காண்ட் மாநிலத்தின் 2020ம் ஆண்டுக்கான துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் கோனிகா லாயக். இவர் இன்று படுக்கை அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டறியப்பட்டுள்ளார்.
கோனிகா சமீபத்தில் தேசிய துப்பாக்கிச்சுடுதல் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கோனிகா லாயக்
28 வயதாகும் கோனிகா லாயக் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரின் நிலையை அறிந்த நடிகர் சோனு சூட் இந்தாண்டு தொடக்கத்தில் புதிய ரைஃபல் துப்பாக்கி ஒன்றை பரிசாக அளித்தார். அதன்பின்னர் தான் கோனிகா என்ற பெயர் பிரபலமடைந்தது. அதன்பிறகு கொல்கத்தாவிற்கு வந்த கோனிகா, அர்ஜுனா விருது பெற்ற ஜாய்தீப் கர்மாக்கரிடம் பயிற்சி பெற்று வந்தார்.

தற்கொலைக்கான காரணம்
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் ( ஜி வி மாவலங்கர் தொடர் ) நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட கோனிகா, முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தொடர்ந்து கவலையில் இருந்ததாக தெரிகிறது.

எழுதி வைத்த கடிதம்
இந்நிலையில் இன்று காலை ஹௌரா மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதியில் கோனிகா தூக்கில் தொங்கியபடி கண்டறியப்பட்டார். தனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாததால் உயிரை விடுவதாக" கடிதமும் எழுதி வைத்திருந்துள்ளார். அந்நேரத்தில் தோழிகள் வெளியே சென்றிருந்ததாக தெரிகிறது. அவரின் இந்த தற்கொலை பல்வேறு வழக்குகளின் வேகத்தை அதிகரித்துள்ளது.

தொடர் பரிதாபங்கள்
இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் 4 துப்பாக்கிச்சுடுதல் வீரர், வீராங்கனைகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹுனர்தீப் சிங், செப்டம்பர் மாதம் மொஹாலியை சேர்ந்த நமன்வீர சிங் பிரார், டிசம்பர் 9ம் தேதி குஷ்சீரத் கவுர் சந்து ஆகியோர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications