மலேசிய சர்வதேச கராத்தே போட்டி.. வாகை சூடிய கன்னியாகுமரி மாணவர்.. குவியும் வாழ்த்துகள்
மலேசியா: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே கராத்தேயில் ஆர்வம் கொண்டவர். தற்போது மலேஷியாவில் நடைபெற்ற 16வது ஓபன் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.

போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 35 நாடுகளை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்ட ஆகாஷ் ஒரு தங்க பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
போட்டிகளில் வென்ற பின், தனது சொந்த ஊரான கீழமணக்குடிக்கு ஆகாஷ் வந்தார். அவரை பங்கு தந்தைகள் ஜான் பெனிட்டோ, கிளிட்டஸ் உள்ளிட்ட உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து ஆகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் மலேஷியாவில் 35 நாடுகளை சேர்ந்த 1,500 கராத்தே வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில் கலந்துகொண்டு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் வென்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.இந்த வெற்றிக்கு எனது பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர்.

நான் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள 1 லட்சம் ரூபாய் செலவானது.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எனது தந்தை எனக்காக இதனை செலவழித்தார். இது போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு இதுபோன்ற பதக்கங்களை நம் நாட்டிற்காக பெற ஆசையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் இதுபோன்ற பெரிய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற முடியும். எனவே அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றார்.



Click it and Unblock the Notifications