"இனப்படுகொலை" துயரத்தில் இருந்து மீண்டு தனிநாடாகி விளையாட்டிலும் சாதனை படைத்த கொசாவோ
பிரிஸ்டினா: நூற்றாண்டு கால இனப்படுகொலை துயரத்தில் இருந்து மீண்டும் தனிநாடாகி தற்போது சர்வதேசமும் திரும்பிப் பார்க்கிற வகையில் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றிருக்கிறது கொசாவோ.
கோசாவோ.. இந்த தேசத்து அல்பேனிய மக்கள் அனுபவித்த துயரங்கள், எதிர்கொண்ட இனப்படுகொலைகள்தான் எத்தனை எத்தனை... கடந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே மாறி மாறி ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட கொசாவோவுக்கு 21-ம் நூற்றாண்டுதான் விடுதலை வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
1913-ம் ஆண்டில் அல்பேனியர்களை அதிகம் கொண்ட கொசாவோ, செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. செர்பியர்கள் கிறித்த மதத்தவர்... அல்பேனிய மொழி பேசும் மக்களோ இஸ்லாமியர்கள்... இருதரப்புக்கும் மோதல்கள் வெடித்தன.... இது மத மோதல்களாக இல்லாமல் அல்பேனிய தேசிய இனத்தின் போராட்டமாகவே தொடர்ந்தது.

ஓயாத விடுதலைப் போர்
2-வது உலகப் போர் முடிவடைந்த பின்னர் 1946-ல் யூகோஸ்லேவியா உதயமானது. 1991-ல் யூகோஸ்லேவியா உடைந்தது. அப்போதும் செர்பியாவின் ஒரு பகுதியாக கொசாவோ நீடித்தே வந்தது. கொசாவோவின் அல்பேனிய மக்களின் விடுதலைப் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை.

அடங்காத ஒடுக்குமுறை
அதேநேரத்தில் செர்பியாவின் மூர்க்கத்தனமான இனஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான அல்பேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது சர்வதேச நாடுகள் கொசாவோ மீதான செர்பிய இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்தன.

விடுதலை... விடுதலை...
கொசாவோ விவகாரத்தில் ஐநா தலையிட்டது... செர்பியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக நேட்டோ படைகள் களமிறங்கின... இதன் விளைவாக 2008-ம் ஆண்டு கொசாவோ தனிநாடாக பிரகடனம் செய்தது. ஐநா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் அங்கீகரித்தன.

முதல் முறையாக ஒலிம்பிக்கில்...
தனிநாடாகி 8 ஆண்டுகளான நிலையில் தற்போதைய ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கொசாவோ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 52 கிலோ ஜூடோ போட்டியில் கொசாவோவின் கெல்மண்ட்டி தங்கம் வென்று அந்த தேசத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

தென்சூடானும்...
கொசாவோவைப் போல அண்மையில் தனிநாடாக உதயமான தென்சூடானும் தமது வீரர்களை ஒலிம்பிக் களத்தில் இறக்கியுள்ளது. கொசாவோ பாணியில் தென்சூடானும் சாதிக்க வேண்டும் என்பதுதான் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications