உலகக் கோப்பை-கோட்லா மைதானத்திற்குத் தடை வரலாம்

வருகிற 2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது, டெல்லி கோட்லா மைதானத்தில் நான்கு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த போட்டிகளை இங்கு நடத்த ஐசிசி தடை விதிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
நேற்றைய போட்டி கைவிடப்பட்டதைத் தொடர்ந்து போட்டி நடுவர் ஆலன் ஹர்ஸ்ட் ஐசிசிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கோட்லா பிட்ச் மிகவும் அபாயகரமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அடுத்த 12 மாதங்களுக்கு கோட்லா மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும் என ஐசிசி சூசகமாக தெரிவித்துள்ளது.
அப்படி தடை விதிக்கப்பட்டால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இங்கு விளையாடப்படவுள்ள நான்கு போட்டிகளுக்கும் கூட தடை விதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கோட்லா மைதானத்தில் 2011 பிப்ரவரி 24ம் தேதி தெ. ஆப்பிரிக்கா- மேற்கு இந்தியத் தீவுகள், பிப்ரவரி 28ல் நெதர்லாந்து - மேற்கு இந்தியத் தீவுகள், மார்ச் 7ல் கனடா -கென்யா, மார்ச் 9ல் இந்தியா - நெதர்லாந்து ஆகிய போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரோஸ்ஷா கோட்லா மைதானம் முக்கிய கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலக்கப்படும் அபாயம் உருவாகும்.
1996ம் ஆண்டு முதல் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கோட்லா மைதானம் குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு ஐசிசி வசம் சென்றுள்ளது.
இருப்பினும் கோட்லா மைதானத்திற்கு பெரும் அவப் பெயர் ஏற்படுவதிலிருந்து அதைக் காக்கவும், மீட்கவும் கிரிக்கெட் வாரியமும், டெல்லி கிரிக்கெட் சங்கமும் தீவிரமாக முயலும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் இங்கு அடுத்த மாதம் நடக்கவிருந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதற்கிடையே நேற்று போட்டி ரத்து செய்யப்பட்டதால் அதற்கான டிக்கெட் கட்டணத்தை வாங்க மைதானத்துக்கு வர வேண்டாம் என்றும், யூனியன் வங்கியி்ல் டிக்கெட்டைக் காட்டி பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications