Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொழும்பு டுவென்டி 20 போட்டியில் இந்தியா வெற்றி - பதான் சகோதரர்கள் அபாரம்

Yousuf Pathan and Irfan Pathan
கொழும்பு: கொழும்பில் நேற்று நடந்த டுவென்டி 20 போட்டியில் பதான் சகோதரர்களின் அபார ஆட்டத்தால் இந்தியா இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டுவென்டி 20 போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்தது.

இலங்கை கேப்டன் தில்ஷான் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜெயசூர்யாவும், தில்ஷானும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் அதிரடியாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

ஸ்கோர் 59 ரன்களாக இருந்தபோது ஜெயசூர்யா 33 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் இந்திய பந்து வீச்சாளர்கள் ரன் வேகத்தை சற்று கட்டுப்படுத்தினர். ஜெகன் முபாரக் 13 ரன்களும், கபுகதேரா 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

சில எல்பிடபிள்யூக்களை நடுவர்கள் வழங்காதது இந்தியத் தரப்பில் சோர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தில்ஷான் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

இதையடுத்து இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஷேவாக்கும், கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஷேவாக் ஒரு ரன் எடுத்திருந்தபோது தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே கம்பீர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சுரேஷ் ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் சேர்ந்து சற்று விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ரன்கள் குவித்தனர்.

இந்தியாவின் தடுமாற்றத்தை சரி செய்து ஸ்திரமாக்கிய அவர்கள் ஸ்கோர் 81 ரன்களாக இருந்தபோது பிரிந்தனர். யுவராஜ் சிங் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரெய்னா 35 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் டோணி (13), ரோஹித் சர்மா (4), ரவீந்திர ஜடேஜா (5) அடுத்தடுத்து வெளியேறினர்.

115 ரன்களுக்குள் இந்தியா 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், இந்தியாவின் வெற்றி சந்தேகத்திற்கிடமானது. இலங்கையே வெற்றி பெறும் என்ற சூழ்நிலை உருவானது.

இந்த சமயத்தில்தான் இர்பான் பதானும், அவரது அண்ணன் யூசுப் பதானும் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை திசை திருப்பினர்.

யூசுப் பதான் படு ஆவேசமாக ஆடினார். முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அண்ணன் அடித்ததைப் பார்த்த இர்பானும் பந்துகளை பார்த்துப் பார்த்து விளாசினார். இருவருமாக சேர்ந்து வந்த பந்துகளையெல்லாம் துவைத்து எடுத்ததால் ஆட்டமே அப்படியே இந்தியாவுக்கு சாதமாக மாறிப் போனது.

கடைசி இரு ஓவர்களி்ல் வெற்றி பெற 18 ரன்கள் இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. இந்த நிலையில் 19வது ஓவரை பெர்னாண்டோ வீசினார்.

இந்த ஓவரில், இர்பான் பதான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்ட 13 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் நெருக்கடி அப்படியே விலகிப் போனது.

கடைசி ஓவரை லசித் மலிங்கா போட்டார். முதல் பந்தில் யூசுப் பதான் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை இர்பான் எதிர் கொண்டார். வந்த வேகத்தில் பந்தை வாங்கி சிக்சருக்கு விரட்டினார். இதன் மூலம் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

பதான் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து 59 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இர்பான் பதான் 33 ரன்களையும், யூசுப் பதான் 22 ரன்களையும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்து வீச்சில் 2 விக்கெட்களையும், பேட்டிங்கில் 22 ரன்களையும் குவித்த யூசுப் பதான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவும், இலங்கையும் டுவென்டி 20 போட்டியில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். முதல் போட்டியிலேயே, அதுவும் இலங்கை மண்ணிலேயே அந்த அணியை இந்தியா துவம்சம் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+