சொன்னபடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் மின்னல் வீரர் உசேன் போல்ட்!
லண்டன்: லண்டன் டயமண்ட் லீக் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற ஜமைக்காவின் மின்னல் வீரர் உசேன் முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார். இதையடுத்து பிரேசிலில் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் பங்கேற்கவுள்ளார்.
பிரேசிலில் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் ஆக.,5-ந் தேதி தொடங்குகிறது. இதனிடையே மின்னல் வீரர் உசேன் போல்ட் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக, அவர் ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் கலந்து கொள்வதில் சந்தேகம் இருந்தது. உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து வந்தது.
எனினும் லண்டன் டயமண்ட் லீக்கில் பங்கேற்று ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேன் என உசேன் அறிவித்திருந்தார்.

மீண்டும் மின்னலாக வருகிறார்
இந்நிலையில், லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் டயமண்ட் தடகளப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், உசேன் போல்ட் 19.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடந்த 2009-ம் ஆண்டு, 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடிகளில் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2-வது மற்றும் 3-வது இடம்
பனமா வீரர் அலான்சோ எட்வர்ட், 20.04 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தையும், காமன்வெல்த் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த பிரிட்டன் வீரர் ஆடம் ஜெமிலி, 20.07 வினாடிகளில் 3வது இடத்தையும் பிடித்தனர்.

ஒலிம்பிக்கிற்கு தகுதி
இது குறித்து உசேன் போல்ட் கூறியதாவது: ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றாலும், இன்னும் முழுமையான ஃபார்மில் நான் இல்லை கடினமாக உழைக்க வேண்டியது இருக்கிறது. இருந்த போதிலும் இந்த வெற்றி நம்பிக்கை அளிக்கிறது என்று கூறினார்.

தங்க நாயகன்
29 வயதான உசேன் போல்ட், பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப் பந்தயத்திலும், ரீலே உள்பட 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கிலும் 100 மீ மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தங்கம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications