டிராக்டர்கள் மீது லாரி மோதி 17 பேர் பலி!! 30 பேர் படுகாயம் !!!
உத்தரபிரதேசம் : பூரா என்ற கிராமத்தில் 2 ட்ராக்டர்களில் பூஜைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 17 பேர் பலியாகினர்.
பூரா கிராமத்தில் பகவத் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக 50-க்கும் மேற்பட்டோர் 2 டிராக்டர்களில் பூஜை நடைபெறும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஹர்ஷந்த்பூர் என்ற கிராமம் அருகே டிராக்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தன. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி முன்னால் சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பின்னால் வந்த டிராக்டரும் முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி உருக்குலைந்தது.
இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 5 சிறுவர்கள் என 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.


Click it and Unblock the Notifications