ஒருவழியாக 'பச்சைக்குத் திரும்பியது' பங்குச் சந்தை!

இவர்கள் அமெரிக்க கடன் தரவரிசையை குறைத்துவிட, ஆடிப்போனது அமெரிக்க பொருளாதாரம். இன்னொரு பக்கம் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாறின. அங்குள்ள நாடுகள் பலவற்றின் நிலைமை கேள்விக்குறியாகிவிட்டது.
போதாக்குறைக்கு பிரான்ஸின் நிலைமையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று செய்தி பரவ, ஆசிய பங்குச் சந்தைகள் சறுக்குமரத்தில் சறுக்கியது போல வீழ்ச்சி கண்டன. பல நாடுகளில் இன்னும் கூட ஆட்டம் நிற்கவில்லை.
இந்த சூழலில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்குப் பிறகு இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் துவங்கியது. சற்று பயத்தோடே குறியீட்டெண் போக்கை கவனிக்க ஆரம்பித்த முதலீட்டாளர்களுக்கு, அன்னா ஹஸாரே கைது என்று பரபரப்பு வர, பயம் தொற்றிக் கொண்டது. இங்குதான் எதற்கெடுத்தாலும் பங்குகள் விலை சரிகின்றனவே...
ஆனால் நல்லவேளை, வர்த்தகம் தொடங்கி இரண்டு மணி நேரமாகியும் இன்னும் 'பச்சை'யிலேயே நிற்கின்றன சென்செக்ஸும் நிப்டியும்.
காலை 10.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 135 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 16,974-ஆக உள்ளது. இன்று மீண்டும் 17000 புள்ளிகளைத் தாண்டுமா தெரியவில்லை.
நிப்டி 34 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 5,107 -ல் உள்ளது. பெரும் சரிவுக்குப் பின்னரும் தொடர்ந்து 5000 புள்ளிகளுக்கு அதிகமாகவே இந்த குறியீட்டெண் தொடர்வது முதலீட்டாளர்களை ஆறுதல்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த நிலை இன்று பிற்பகலுக்குள் மாறலாம் என எதிர்ப்பார்க்கிறார்கள். அன்னா ஹஸாரே விவகாரத்தால், அமைதியின்மை ஏற்படும் பட்சத்தில் இந்த குறியீட்டெண்களின் போக்குகள் மாறக்கூடும். இது ஒரு மேலோட்டமான காரணம்தான். உண்மையில் மேற்குலகின் பொருளாதார நிலையில் எந்த திருப்தியளிக்கும் முன்னேற்றமும் இல்லை. எனவே இப்போது இந்திய முதலீட்டாளர்களுக்குக் கிடைத்து சிறு திருப்தி, ரொம்ப நேரம் நீடிக்குமா... பார்க்கலாம்!
Story first published: Wednesday, December 7, 2011, 18:49 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications