இந்தியாவுக்கு காமன்வெல்த் தங்கம்.. 3வது முறையாக வென்ற மீராபாய் சானு.. வரலாற்று சாதனை
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ பளுதூக்குதல் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடையைத் தூக்கி, தொடர்ந்து 3வது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று மகத்தான வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரண்டு சுற்றிலுமே தனது முதல் முயற்சிகளைத் தவறவிட்டு ரசிகர்களுக்குச் சற்று அதிர்ச்சி அளித்த மீராபாய் சானு, அதன் பின்னர் மன உறுதியுடன் கம்பீரமாக மீண்டு வந்தார். ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையை தூக்கி, அந்தப் பிரிவிலும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் புதிய சாதனையை செய்தார்.
இதன்மூலம் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் என இரண்டிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 190 கிலோ (85 + 105) எடையை தூக்கிய மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டிகளில் ஒட்டுமொத்த எடையில் புதிய வரலாற்றுச் சாதனையை செய்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இது காமன்வெல்த் விளையாட்டில் மீராபாய் வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் ஆகும். இதன் மூலம், இந்தியாவிற்கு 2026 காமன்வெல்த் விளையாட்டில் முதல் தங்கம் கிடைத்துள்ளது.
இந்தப் போட்டியில் நைஜீரியாவின் ரூத் அஸுகுவோ நியோங் 168 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், மலேசியாவின் ஐரீன் ஜேன் ஹென்றி 167 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தொடக்கத்தில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டபோதும், தனது அனுபவத்தாலும் கடின உழைப்பாலும் மீண்டு வந்து சாதித்துக் காட்டிய மீராபாய் சானு, காமன்வெல்த் பளுதூக்குதலின் நிஜ ராணி என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளார். தொடர்ச்சியாக 3வது முறையாகத் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

