இஸ்லாமாபாத்: நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் மோசமான தோல்வியை பாகிஸ்தான் அணி சந்தித்ததைத் தொடர்ந்து கடும் விமர்சனத்துக்குள்ளான கேப்டன் யூனிஸ்கானை அப்பொறுப்பிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. புதிய கேப்டனாக மூத்த வீரர் முகம்மது யூசுப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அபுதாபியில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி 1 - 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ்கான் சிறப்பாக செயல்படவில்லை. இதையடுத்து அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.
குறிப்பாக முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மிகக் கடுமையாக யூனிஸ்கானை சாடியிருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் கொண்ட போட்டித் தொடரில் ஆட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 24 ந்தேதி தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக யூனிஸ்கானுக்கு பதிலாக மூத்த வீரர் முகமது யூசுப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தனக்கு ஓய்வளிக்கும்படி யூனிஸ்கான் கேட்டுக் கொண்டதன் பேரில் யூசுப் கேப்டனாக்கப்பட்டுள்ளாராம்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முகமது யூசுப் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் தெரிவித்துள்ளார்.
எனக்கு ஓய்வு தேவை...யூனிஸ்கான்
இதுகுறித்து யூனிஸ்கான் கூறுகையில், தீவிர யோசனைக்கு பிறகே தற்காலிகமாக ஓய்வு எடுக்கும் முடிவை எடுத்தேன். இப்போது நான் சிறந்த பார்மில் இல்லை. இதனால் எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
மற்றபடி எனக்கு தனிப்பட்ட யாருடனும் எந்த பகைமையும் கிடையாது. எனது ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இத்துடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விடவில்லை. மீண்டும் வருவேன். எனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை விட நாடே முதலில் முக்கியம் என்றார்.