பியூர்டோரிகாவை தூங்க விடாமல் துள்ள வைத்த "ஓ மை காட்" மோனிகா பியூக்!
ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் போட்டியில் பியூர்டோரிகா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் பியூர்டோரிகாவின் மோனிகா பியூக், முன்னணி வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பரை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தி விட்டார்.
மோனிகாவிடம் எதிர்பாராத விதமாக தோற்றுப் போனதால் கெர்பர் அதிர்ச்சியடைந்தார். பியூர்டோரிகாவுக்கு ஒலிம்பிக் போட்டி ஒன்றில் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுதான் என்பதால் அந்த நாடே உற்சாக வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது.
கெர்பர் சற்றும் எதிர்பாராத வகையில் அசத்தலாக ஆடி தனது நாட்டின் தங்கக் கனவை நிறைவேற்றியுள்ளார் மோனிகா. பியூர்டோரிகா இதுவரை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதில்லை. இதுவே முதல் முறையாகும்.

கெர்பரை வீழ்த்தி
இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பரை 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் மோனிகா வீழ்த்தி தங்கப் பதக்கத்தையும், சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.

புளோரிடாவில் வசிக்கும் தங்க மங்கை
22 வயதான மோனிகா அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார். தர வரிசையில் 34வது இடத்தில் இருப்பவர், கெர்பரோ, உலகின் 2வது நிலை வீராங்கனை ஆவார். எனவே மோனிகாவின் வெற்றி நிச்சயம் மிகப் பெரியது.

முகுருசாவை விரட்டியவர்
மோனிகா தனது காலிறுதிப் போட்டியில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் காப்ரின் முகுருசாவை தோற்கடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தனக்கும், தனது நாட்டுக்கும் பெருமை தேடிக் கொண்டு விட்டார் மோனிகா.

முதல் தங்கம்
பியூர்டோரிகா நாடு இதுவரை ஒலிம்பிக்கில் எட்டு பதக்கம் வென்றுள்ளது. அதில் 2 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் ஆகும். இதில் 6 பதக்கங்கள் குத்துச் சண்டை மூலம் கிடைத்தவை. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக அது தங்கம் வென்றுள்ளது.

ஓ மை காட்!
வெற்றி பெற்றதும் ஆனந்தக் கண்ணீர் விட்டபடி ஓ மை காட் என்று குமுறி அழுது விட்டார் மோனிகா. மேலும் தனது நாட்டு தேசியக் கொடியை எடுத்துக் கொண்டு டென்னிஸ் கோர்ட்டை உற்சாகத்தோடு வலம் வந்தார்.

எனது மக்களுக்காக இது
மோனிகா கூறுகையில், எனது மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த வெற்றி இது. எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. எனது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அது போதும் என்றார் புன்னகைத்தபடி.


Click it and Unblock the Notifications