அட்சய திருதியை நாளில் காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 8 தங்கம் கிடைத்தது
கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என, 59 பதக்கங்களை குவித்துள்ளது. அட்சய திருதியை நாளான இன்று மட்டும் இந்தியா 8 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் இந்தியாவுக்கு முதல் நாளில், மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி வென்றனர். இரண்டாவது நாளில், பளு தூக்குதலில் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றனர். மூன்றாவது நாளில் பளு தூக்குதலில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம், ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார்.
நான்காவது நாளில் மகளிர் பளு தூக்குதலில் பூனம் யாதவ் தங்கம், துப்பாக்கி சுடுதலில் 11-ம் வகுப்பு மாணவி மனு பாக்கர் தங்கமும், ஹீனா சித்து வெள்ளியும், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் ரவிக்குமார் வெண்கலமும் வென்றனர். பளுதூக்குதலில் விகாஸ் தாகுர் வெண்கலம் வென்றார். அதைத் தொடர்ந்து மகளிர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது.
ஐந்தாவது நாளில் ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பிரதீப்சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்து ராய் தங்கம், ஓம் மிதர்வால் வெண்கலம் வென்றனர். ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம், பாட்மின்டன் அணி தங்கம் வென்றது. ஆறாவது நாளில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சிந்து தங்கம் வென்று அசத்தினார். பாரா பளுதூக்குதலில், ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில், இந்திய மாற்றுத் திறனாளி வீரர் சச்சின் சவுத்ரி வெண்கலம் வென்றார்.
போட்டியின் 7வது நாளில் துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் டபுள் டிராப் பிரிவில் ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றார். ஆடவர் டபுள் டிராப் பிரிவில் அங்குர் மிட்டல் மற்றும் ஆடவர் 50 மீட்டர் பிஸ்டர் பிரிவில் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலம் வென்றனர். போட்டியின் 8வது நாளில் மல்யுத்தத்தில், ராகுல் அவாரே தங்கம் வென்றார். சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தினார். மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளி, மகளிர் மல்யுத்தத்தில் பபிதா குமார் வெள்ளியும், கிரண் வெண்கலமும் வென்றனர்.

ஒரே நாளில் 11 பதக்கங்கள்
9வது நாளான நேற்று 3 தங்கம் உள்பட 11 பதக்கங்கள் கிடைத்தன. மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் தேஸ்விணி சாவந்த், ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில் அனிஷ் பாவலா, மல்யுத்தத்தில் பஜ்ரங்க் புனியா தங்கம் வென்றனர். துப்பாக்கிச் சுடுதலில் அஞ்சும் முட்கில், மல்யுத்தத்தில் பூஜா தாண்டா, மவுசம் காத்ரி, டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையரில் மணிகா பத்ரா, மவுமா தாஸ் ஜோடி வெள்ளி வென்றனர். குத்துசண்டையில் நானன் தன்வார், மகளிர் மல்யுத்தத்தில் திவ்யா காக்ரன், ஆடவபர் குத்துச்சண்டையில் ஹசாமுதீன் முகம்மது, மனோஜ் குமார் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

ஒரே நாளில் 8 தங்கம்
இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்துள்ளது. மகளிர் 48 கிலோ குத்துச்சண்டையில் மேரி கோம் தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் அவர் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத், ஆடவர் குத்துச்சண்டை 52 கிலோ எடைப் பிரிவில் கவுரவ் சோலங்கி தங்கம் வென்றனர். தடகளத்தில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் ஆடவர் 125 கிலோ பிரிவில் சுமித் மாலிக், மகளிர் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகத், மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றியரில் மணிகா பத்ரா தங்கம் வென்று அசத்தினர். குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் விகாஷ் கிஷண் யாதவ் தங்கம் வென்று அசத்தினார்.

ஸ்குவாஷிலும் பதக்கம்
ஆடவர் குத்துச்சண்டையில் 49 கிலோ பிரிவில் அமித் பாங்கலும், 60 கிலோ எடைப் பிரிவில் மணிஷ் கவுசிக், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் தீபிகா பலிகல், சவுரவ் கோஷல் வெள்ளி வென்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக்கின் மனைவிதான் தீபிகா பலிகல் என்பது குறிப்பிடத்தக்கது. டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையரில் சரத் அசந்தா கமல், சத்யன் ஞானசேகரன் மற்றும் ஆடவர் 91 கிலோவுக்கு மேற்பட்டோர் குத்துச்சண்டையில் சதிஷ்குமார் வெள்ளி வென்றனர்.

57 பதக்கங்கள் குவிப்பு
மல்யுத்தத்தில் மகளிர் 62 கிலோ பிரிவில் சாக் ஷி மாலிக், ஆடவர் 86 கிலோ பிரிவில் சோம்வீர் காடியான், பாட்மின்டன் மகளிர் இரட்டையரில் அஸ்விணி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி வெண்கலம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையரில் ஹர்மீத் தேசாய், சனிஸ் ஷெட்டி வெண்கலம் வென்றனர்.
அட்சய திருதியை நாளான இன்று மட்டும் இந்தியா 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் வென்றுள்ள.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என, 59 பதக்கங்களை குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications