“என் 12 வருட கடின உழைப்பு ‘வெண்கலம்’ பெற்றுத் தந்துள்ளது”.. வரலாறு படைத்த மகிழ்ச்சியில் சாக்ஷி!
ரியோ டி ஜெனிரோ: தனது 12 வருட கடின உழைப்பே இன்று ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுத் தந்துள்ளது. என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த நாட்டு மக்களை மதிக்கிறேன். அனைவருக்கும் இந்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த சாக்ஷி மாலிக். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் புதிய கணக்கை இந்தியா தொடங்கியுள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ள சாக்ஷி(23) ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

தொடர் தோல்வி...
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக வீரர்கள் பங்கேற்றுள்ள ஒலிம்பிக் போட்டி, எனவே அதிக பதக்கம் கிடைக்கும் என்ற இந்தியர்களின் கனவை ஏமாற்றி, அடுத்தடுத்து இந்திய வீரர்கள் தோல்வி அடைந்து வந்தனர்.

கடின உழைப்பின் பலன்...
இந்த சூழ்நிலையில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வாங்கித் தந்துள்ளார் சாக்ஷி. தனது வெற்றி குறித்து அவர் கூறுகையில், "12 வருடங்கள் இரவு பகல் பாராமல் உழைத்ததன் பலனாக இந்த வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது.

நம்பிக்கை...
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவள் ஆவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. இனி, எனக்குப் பின் வரும் வீரர்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன்.

தொடர்ந்து போராடினேன்...
எப்படியும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவேன் என நம்பினேன். எனவே தொடர்ந்து போராடினேன். என்னுடைய அதிகபட்ச பலத்தைப் பிரயோகித்து வெற்றி பெற விளையாடினேன்.

நன்றி.. நன்றி..
என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த நாட்டு மக்களை மதிக்கிறேன். அனைவருக்கும் இந்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என இவ்வாறு மகிழ்ச்சி பொங்க சாக்ஷி தெரிவித்துள்ளார்.

5வது பதக்கம்...
ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் சுசில்குமார் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications