'சதியால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தேன்'... ஜூனியர் வீரர் மீது நர்சிங் யாதவ் போலீசில் புகார்
டெல்லி: ஜூனியர் வீரர் ஒருவரே தனது உணவில் ஊக்கமருந்தை கலந்ததாகவும், தன்னை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாமல் தடுக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளதாகவும் இந்திய மல்யுத்த வீரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.

ஒலிம்பிக் வாய்ப்பு...
ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நர்சிங்கின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது. இதனால் மனமுடைந்து போனார் நர்சிங்.

போலீசில் புகார்...
இந்நிலையில், ஹரியானா மாநிலம், சோன்பட் மாவட்டத்தில் உள்ள ராய் காவல் நிலையத்தில் நேற்று நர்சிங் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'சோன்பட் சாய் மையத்தில் பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஜித்தேஷ் என்பவர் ஸ்டீராய்டை கலந்துள்ளதாக' குற்றம் சாட்டியுள்ளார்.

சதி...
மேலும், செல்வாக்கு மிகுந்த சிலரின் சதியால், ஊக்கமருந்து விகாரத்தில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிடப்படாமல் தனது புகாரில் நர்சிங் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குப்பதிவு...
நர்சிங்கின் இந்தப் புகாரையடுத்து, சில சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ஜித்தேஷ் மீது உணவில் விஷம் கலக்குதல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜித்தேஷ்...
தற்போது குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஜித்தேஷ், ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றுள்ள சுஷில்குமாரின் மாமனார் சத்ரபால்சிங்கிடம், டெல்லி சத்ரசால் மையத்தில் மல்யுத்தப் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த விவகாரத்தில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications