ஊக்கமருந்து சர்ச்சை.. ஒலிம்பிக் கனவு தகர்ந்த சோகம்.. தற்கொலைக்கு முயற்சித்த நர்சிங் யாதவ்
டெல்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் கனவை இழந்த இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், சோகத்தில் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதாக அவரது நண்பர் ஒருவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நர்சிங்கின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது. இதனால் மனமுடைந்து போனார் நர்சிங்.
இந்நிலையில், ஒலிம்பிக் வாய்ப்பு பறிக்கப் பட்டதால் சோகத்தில் இருந்த நர்சிங், தற்கொலைக்கு திட்டமிட்டதாக அவரது நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெயரைக் கூற விரும்பாத அந்த நண்பர், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "நர்சிங் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை எட்டினார். ஆனால் அவர் இந்த முறையில் அவமதிக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்த நரசிங் யாதவ் தற்கொலை செய்யும் முடிவுக்கே சென்றுவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் விளையாட்டுத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications