Neeraj Chopra- நீரஜ் சோப்ரா - மனு பாக்கர் திருமணமா.. 2 வீடியோக்களை காட்டும் ரசிகர்கள்.. உண்மை என்ன?
பாரிஸ்: 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவும், துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று கொடுத்த மனு பாக்கரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இணையத்தில் வெளியான இரண்டு வீடியோக்களால் இந்த பேச்சு கிளம்பி உள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மனு பாக்கர் வென்றார். அவர் துப்பாக்கி சுடுதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும், கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றார். அதே போல ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இந்த நிலையில், நேற்று நடந்த ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஷ் மற்றும் மனு பாக்கர் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்றனர். பின்னர் அந்த அரங்கில் ஒரு பக்கத்தில் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும் நின்று சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நின்று கொண்டிருந்த பாணி மற்றும் பேசிய விதம் ஆகியவற்றை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன.
அவர்கள் இருவரும் திருமணம் செய்ய போகிறார்களா? என பலரும் கேட்டு வருகின்றனர். இந்த ஒரு வீடியோ மட்டும் இன்றி மற்றொரு வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. அதில் மனு பாக்கரின் தாய் சுமேதா, நீரஜ் சோப்ராவுடன் வேடிக்கையாக பேசிக் கொண்டு இருந்தார். அப்போது நீரஜ் சோப்ராவின் கைகளை எடுத்து தனது தலையில் வைத்து ஆசீர்வாதம் வாங்குவது போல செய்தார்.

அதை வைத்து தனது மகளுக்கு அவர் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரை பேசி முடிக்க முயற்சி செய்கிறார் எனவும் நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை எனவும் சிலர் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
"நிறைவு விழாவில் மனு பாக்கர் அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகளுடனும் பேசிக் கொண்டுதான் இருந்தார். எனவே, அதை வைத்து கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம். இந்தியாவில் ஒரு ஆணும், பெண்ணும் சிரித்து பேசினால் காதல், திருமணம் என பேசும் வழக்கம் இருக்கிறது" என ஒருவர் கருத்து கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications