தங்க மகன்களுக்கே இந்த நிலையா? பயிற்சியாளர் அத்துமீறல்.. நீரஜ் சோப்ரா, சுமித் ஆன்டில் புகார்
டெல்லி: தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர்களான நீரஜ் சோப்ரா மற்றும் சுமித் ஆன்டில் ஆகியோர் இணைந்து, மத்திய விளையாட்டுத் துறைக்கு அளித்துள்ள ஒரு ரகசியப் புகார் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துரோணாச்சார்யா விருது பெற்ற ஒரு மூத்த பயிற்சியாளர், தங்களது விளையாட்டில் தொடர்ந்து பதக்கம் வென்று வரும் நீரஜ் சோப்ரா மற்றும் சுமித் ஆன்டில் ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, இந்திய விளையாட்டுத் துறையையே தலைகுனிய வைத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற வீரர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண வீரர்களின் நிலை என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
புகாரின் பின்னணி
டோக்கியோ மற்றும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் ஆன்டில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இது குறித்து புகார் மனுவை அளித்துள்ளார். அதில், துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் நவல் சிங் தங்களை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாருக்கு ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவும் தனது முழு ஆதரவைத் தெரிவித்து, அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

பயிற்சியாளர் அத்துமீறல்
இது குறித்து சுமித் ஆன்டில் கூறுகையில், "நவல் சிங் எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது. அவர் எங்களைத் திட்டும் பேச்சுகளைப் பதிவு செய்து, வேண்டுமென்றே எங்கள் மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அவை எங்களை வந்தடைய வேண்டும் என்பதே அவரது நோக்கம். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வரும் வேளையில், இத்தகைய செயல்கள் எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் ஒரு எல்லையை தாண்டி அத்துமீறி தனிப்பட்ட விவகாரங்களை விமர்சிப்பதை ஏற்பதே முடியாது. அதிலும் குடும்பத்தினரை திட்டுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
என்ன காரணம்?
நவல் சிங் தற்போது சச்சின் யாதவ் என்ற வீரருக்குப் பயிற்சியாளராக உள்ளார். கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 8-வது இடத்தைப் பிடித்தபோது, சச்சின் யாதவ் 4-வது இடத்தைப் பிடித்தார். தனது மாணவர் சச்சின், நீரஜ் சோப்ராவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், நவல் சிங் இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறாரோ என சந்தேகிக்கப்படுகிறது.
நிர்வாகத்தின் மெத்தனம்
இந்த விவகாரத்தில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை முறையான பதில் இல்லை. மேலும், ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் (TOPS) தலைமை நிர்வாக அதிகாரி, இந்தப் புகாரை ரத்து செய்துவிட்டு சமரசமாகப் போகச் சொன்னதாக சுமித் ஆன்டில் குற்றம் சாட்டியுள்ளார்.
நவல் சிங் 2015-ம் ஆண்டு துரோணாச்சார்யா விருது பெற்றவர். அவர் தற்போது இந்திய தடகள சம்மேளனத்தின் கீழ் தேசியப் பயிற்சி முகாமில் பணியாற்றி வருகிறார். நாட்டின் கௌரவத்தை உலக அரங்கில் உயர்த்திய வீரர்களுக்கே இத்தகைய அவமரியாதை நேர்ந்திருப்பது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications