Neeraj Chopra: 1 சென்டிமீட்டரில்.. நொந்து போன நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக் தொடரில் இரண்டாம் இடம்
பிரசல்ஸ்: சனிக்கிழமை இரவு (செப்டம்பர் 14) நடைபெற்ற டைமண்ட் லீக் விளையாட்டுத் தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்தார். வெறும் ஒரு சென்டிமீட்டர் வித்தியாசத்தில் அவர் முதல் இடத்தை இழந்தார்.
அது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. முதல் இடத்தை ஆண்டர்சன் பீட்டர்ஸ் பிடித்தார். இந்த இறுதிப் போட்டியில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் அதிகபட்சமாக 87.87 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இருந்தார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.86 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இருந்தார். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 1 சென்டிமீட்டர் மட்டுமே.

நீரஜ் சோப்ரா காலில் இருந்த உள்காயத்துடன் இந்த தொடரில் பங்கேற்றார். அத்துடன் போட்டி நடந்த பிரசல்ஸ் நகரில் 10 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குளிர் இருந்தது. இந்த நிலையில் 2024 ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தனது முதல் முயற்சியிலேயே 87.87 மீட்டர் தூரம் ஈட்டியை வீசினார்.
ஆனால், நீரஜ் சோப்ரா தனது மூன்றாவது முயற்சியில் தான் 87.86 மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடத்தை பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் தனது முதல் முயற்சியில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி மூன்றாவது இடத்தை பிடித்தார். ஒரு சென்டிமீட்டரில் முதல் இடத்தை நழுவ விட்ட நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் கோப்பையையும் தவறவிட்டார்.
கடந்த ஆண்டு நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரில் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இந்த முறை காயம் காரணமாக அவரால் தனது சிறந்த செயல்பாட்டை அளிக்க முடியாமல் போனது. எனினும், நீரஜ் சோப்ரா ஆறு வாய்ப்புகளிலும் ஈட்டியை சரியாக வீசி இருந்தார். 2024 ஒலிம்பிக் தொடர் மற்றும் டைமண்ட் லீக் தகுதிச் சுற்றில் அவர் பல முறை ஈட்டியை தவறாக வீசி ஃபவுல் செய்து இருந்தார். அந்த வகையில் ஆறுதல் அளித்தார். நீரஜ் சோப்ராவின் காலில் காயம் இருக்கும் நிலையில் அவர் அடுத்து அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications