Neeraj chopra - தங்கத்தை தவறவிட்டும் நீரஜ் சோப்ரா காட்டில் மழை.. விளம்பரத்திற்கான சம்பளமும் உயர்வு
மும்பை : 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புகழின் உச்சிக்கு சென்றார். இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக பல்வேறு விளம்பரங்களில் நீரஜ் சோப்ரா தோன்றி நடித்தார்.
பாலிவுட் நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரருக்கு நிகராக சுமார் 21 நிறுவனங்களில் விளம்பர தூதராக நீரஜ் சோப்ரா இருந்தார். அவருக்கு ஒரு விளம்பரத்திற்கு தலா மூன்று கோடி ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நீரஜ் சோப்ரா பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமே வென்றார்.

இதனால் அவருடைய சந்தை மதிப்பு சரிய நேரிடும் என கருதப்பட்டது. ஆனால் தலைகீழாக நீரஜ் சோப்ராவின் மார்க்கெட் எகிறி இருக்கிறது. நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றும் அவருடைய வர்த்தக சந்தை மதிப்பு 50 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது விளம்பரத்தில் தோன்றும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி, தோனி, சச்சின், ரோகித் சர்மா ஆகியோர் டாப் ஐந்து இடங்களில் இருக்கிறார்கள். இவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு தற்போது நீரஜ் சோப்ரா உயர்ந்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா 20 நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ள நிலையில், சோப்ரா தற்போது அவரை முந்தி இருக்கிறார்.
மேலும் நடப்பாண்டு இறுதியில் அவர் சுமார் 34 நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களையும் முந்தி முதலிடத்தை நீரஜ் சோப்ரா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு தற்போது ஆறு முதல் எட்டு நிறுவனங்கள் அவரை விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
அதுமட்டுமல்லாமல் அவருடைய சம்பளமும் தற்போது 40 முதல் 50 சதவீதம் வரை உயர இருக்கின்றது. நீரஜ் சோப்ரா ஒரு விளம்பரத்திற்கு ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் நிலையில் தற்போது அவருடைய சம்பளம் நான்கிலிருந்து நான்கரை கோடி ரூபாய் வரை உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று கிரிக்கெட் வீரர்களை தவிர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, கால்பந்து வீரர் சுனில் செத்ரி ஆகியோரின் சந்தை மதிப்பும் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications