மும்பை : பிரபல துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான மனு பாக்கர், நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர் சாதனை படைத்தார்.
நீரஜ் சோப்ராவும் மனு பாக்கரும் பாரிஸில் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொண்டு இருந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும் நீரஜ் சோப்ராவை மனு பாக்கரின் அம்மா ஆசிர்வாதம் செய்து அவரை வாழ்த்திய காட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது. இதனால் நீரஜ் சோப்ராவை மனு பாக்கர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து மனு பாக்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் சமூக வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இந்த பேச்சு எப்படி வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் 2018 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இருவரும் அடிக்கடி போட்டியின் போது சந்தித்துக் கொள்வோம். எங்களுக்குள் பெரிய அளவில் உரையாடல்கள் நிகழ்ந்தது கிடையாது.
ஆனால் போட்டியின் போது நாங்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சம் பேசிக் கொள்வோம். எனவே நான் நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற செய்தியில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. அது வதந்தி தான் என்று மனு பாக்கர் கூறியிருந்தார். இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்த மனுபாக்கரின் தந்தை ராம்கிஷன்,மனு பாக்கருக்கு திருமணம் ஆகும் வயது இன்னும் வரவில்லை.
அவர் இன்னும் சிறிய குழந்தை தான்.நாங்கள் திருமணம் குறித்து எல்லாம் யோசிக்கவே இல்லை. மனு பாக்கரின் தாய் நீரஜ் சோப்ராவை அவருடைய மகன் போல் நினைப்பார். இதனால் அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து நீரஜ் சோப்ரா மாமாவிடம் இது குறித்து கேட்கப்பட்டதற்கு நீரஜ் சோப்ரா பதக்கம் என்ற போது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரிந்தது. அதைப்போல் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றால் நிச்சயம் அனைவருக்கும் தெரியவரும் என்று விளக்கம் அளித்துள்ளார்.