டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் டயமண்ட் லீக் பைனல்..... இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி!

டெல்லி: மிகவும் புகழ்பெற்ற, பெருமைமிக்க போட்டியாக கருதப்படும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் டயமண்ட் லீக் பைனலில் பங்கேற்க, இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.
இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, கடந்த சில மாதங்களாக பல்வேறு போட்டிகளில் அசத்தி வருகிறார். 20 வயதாகும் நீரஜ், ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அதைத் தொடர்ந்து சாட்வில்லேவில் நடந்த தடகளப் போட்டியில் 85.17 மீட்டர் தொலைவுக்கு எறிந்து, தங்கம் வென்றார்.
14 சுற்றுகள் கொண்ட டயமண்ட் லீக் போட்டியில் பங்கேற்பது என்பது மிகவும் கவுரமாகும். பெருமைமிக்க இந்தப் போட்டியில், உலகின் தலைச் சிறந்த 8 வீரர்கள் பங்கேற்பர். அந்த வரிசையில் நீரஜ் சோப்ரா இணைந்துள்ளார்.
மொராக்கோவின் ராபாட்டில் நடந்த தகுதிச் சுற்று போட்டியில், 83.32 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து 5வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம், டயமண்ட் லீக் போட்டியின் பைனலுக்கு தகுதி பெற்றார் நீரஜ். பைனல் போட்டிகள் ஜூரிச் நகரில் ஆகஸ்ட் 30ம் தேதி துவங்குகிறது.
ரபாட்டில் நான்கு புள்ளிகளைப் பெற்றார் நீரஜ். முன்னதாக தோகாவில் நடந்த டயமன்ட் லீக் சுற்று போட்டியில் 5 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்தார். அமெரிக்காவின் யூஜெனேயில் நடந்த ஆட்டத்தில் 3 புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பிடித்தார். தோகாவில் 87.43 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார்.
டயமண்ட் லீக் பைனலுக்கு நடப்பு உலகச் சாம்பியன் ஜோக்கன்ஸ் வெட்டர், ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோஹ்லர், 2017 டயமண்ட் லீக் சாம்பியன் ஜாகப் வாட்லிச், ஜெர்மனி சாம்பியன் ஆந்தரீஸ் ஹோப்மான், எஸ்தூனியாவின் சாதனை மன்னன் மேக்னஸ் கிர்ட் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications