முதல்முறையாக தவறிய துண்டு.. சூரிச் டைமண்ட் லீக்கில் சொதப்பிய நீரஜ் சோப்ரா.. சோகத்தில் தங்கமகன்!
சூரிச்: ஸ்விட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா 2வது இடத்தில் பிடித்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
கடந்த வாரம் புட்டாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்தார். நீரஜ் சோப்ராவின் பெயருக்கு பின், ஒலிம்பிக் சாம்பியன் என்ற பெருமையுடன் உலக சாம்பியன் என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது. 25 வயதிலேயே தடகள ஜாம்பவான் அந்தஸ்தை நீரஜ் சோப்ரா பெற்றதாக ரசிகர்கள் கொண்டாடினர்.

ஏனென்றால் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் பட்டம் வென்றார். பின்னர் அதே ஆண்டில் காமன்வெல்த் கேம்ஸ், 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம், 2022ஆம் ஆண்டு டைமண்ட் லீக் சாம்பியன், 2023ல் உலக தடகள சாம்பியன் பட்டம் என்று தடகளத்தின் அத்தனை உச்சங்களையும் எட்டினார் நீரஜ் சோப்ரா.
ஆனால் இந்த சாதனைகளையும், பதக்கங்களையும் பற்றி சிந்திக்காத நீரஜ் சோப்ரா, ஸ்விட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்று வரும் தடகள போட்டியில் பங்கேற்றார். இந்த தடகள போட்டியின் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 85.71 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்தார். ஆனால் இவரை விடவும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற செக் குடியரசு நாட்டின் வாட்லெஜ், 85.86 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார்.
இறுதி வாய்ப்பிலும் நீரஜ் சோப்ரா சொதப்ப, இரண்டாம் இடத்திலேயே முடித்தார். நடப்பாண்டில் இந்தியாவின் தங்க மகன் முதல்முறையாக தங்கத்தை தவறவிட்டுள்ள தொடர் இதுதான். இதனால் நீரஜ் சோப்ரா சோகமடைந்தார். அதுமட்டுமல்லாமல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் 88 மீட்டருக்கும் அதிக தூரத்தை கடந்த நீரஜ் சோப்ரா, இம்முறை 85 மீட்டர் வரையிலேயே ஈட்டியை எறிந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications