வாஷிங்டன்: யூஜினில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டிகள், 2018 காமன்வெல்த் கேம்ஸ், 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம், 2022ஆம் ஆண்டு டைமண்ட் லீக் சாம்பியன், 2023ல் உலக தடகள சாம்பியன் பட்டம் என்று தடகளத்தின் அத்தனை உச்சங்களையும் எட்டிவிட்டார் நீரஜ் சோப்ரா.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக கொண்டாடப்பட்டு வருகிறார். அதேபோல் நீரஜ் சோப்ராவின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்கிறது. இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எப்படி 1983ஆம் ஆண்டுக்கு பின் இளைஞர்கள் கைகளில் பேட்டும், பந்தும் சென்றதோ, அதேபோல் நீரஜ் சோப்ரா மூலமாக தடகளத்தை தேர்வு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு எல்லைக் கோடு என்பதே கிடையாது என்று நீரஜ் சோப்ரா சொல்லுவார். அந்த வகையில் உலக தடகள சாம்பியன் பட்டம் வென்ற பின்னரும் நீரஜ் சோப்ராவின் தாகம் தீரவில்லை. யூஜினில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தி இருக்கிறார்.
இறுதிப்போட்டியில் 83.80 மீட்டர் தூரம் வீசிய நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தை செக் குடியரசு நாட்டின் ஜக்கு வட்லெஜ் 84.24 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தை ஃபின்லாந்து நாட்டின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 மீட்டர் தூரம் எறிந்து கைப்பற்றினார். சூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியிலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கத்தையே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.