ரியோடி ஜெனிரோ: நைஜீரியா-ஈரான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிவடைந்தது. நடப்பு உலக கோப்பையின் முதலாவது டிரா மேட்ச் இதுவாகும்.

உலக கோப்பை போட்டிகளில் இதுவரை நடைபெற்ற பந்தையங்களில் கோல் மழை பொழிந்துவருகிறது. ஆனால் குரூப் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரானும், நைஜீரியாவும் மோதிய நேற்றைய போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடமுடியவில்லை.
நைஜீரியாவுக்கு முதல் பாதி ஆட்டவேளையில் கோல் அடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், அதை முழுமையாக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் நேரம் ஆக, ஆக ஈரான் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. அப்போது நைஜீரியா தடுப்பு ஆட்டம் ஆடியது. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளுமே ஒரு கோலும் போடமுடியவில்லை. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
நைஜீரிய பயிற்சியாளர் ஸ்டீபன் கேசி கூறுகையில், ஈரான் அணியின் அத்தனை வீரர்களும் கோல்கம்பத்தின் குறுக்கேதான் நின்றனர். கோல் அடிப்பதைவிட தடுப்பது அவர்களது விளையாட்டு திட்டமாக இருந்திருக்கலாம். எங்கள் நாட்டில் அனைத்து போட்டிகளிலும் நைஜீரியாதான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அல்லது என்னைத்தான் திட்டுவார்கள் என்றார்.
குரூப் எப் பிரிவில் போஸ்னியா மற்றும் அர்ஜென்டினாவும் உள்ளன. இதில் அர்ஜென்டினாவை வீழ்த்துவது கடினம் என்பதால், நைஜீரியா மற்றும் ஈரான் ஆகிய இரு அணிகளுமே போஸ்னியாவவை அதிக புள்ளிகள் கணக்கில் வெற்றி பெறுவது முக்கியம். அர்ஜென்டினாவுடன் வெற்றி பெற முடியாவிட்டால் அதிக புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடையாமலாவது இருப்பது முக்கியம்.