ஒலிம்பிக் தள்ளி வைச்சது இந்தியாவுக்கு நல்லது தான்.. சொல்கிறார் வோல்கர் ஹெர்மன்!
டெல்லி : கடந்த ஆண்டு தடகளத்தில் இந்தியா சிக்கலில் இருந்தது. தோஹாவில் நடந்த 2019 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கம் மட்டுமே வென்று இருந்தது இந்தியா.
எட்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கம் வென்ற இந்தியா குறைவாக தங்கம் வென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2020 ஒலிம்பிக் போட்டியை 2021க்கு ஒத்திவைக்கும் முடிவால் இந்தியா சற்று நிம்மதி அடைந்துள்ளது. அதற்கு காரணம், வீரர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களை பட்டை தீட்டிக் கொள்ள முடியும் என்பது தான்.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் நீளம் தாண்டுதல் வீரர் எம். ஸ்ரீஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என இந்திய தடகள கூட்டமைப்பின் உயர் செயல்திறன் இயக்குனர் வோல்கர் ஹெர்மன் கூறி உள்ளார்.
"அவர்கள் இருவரும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஆடி இருக்க முடியும். ஆனால் அவர்கள் ஒரு வருடம் அதிகமாகி இருப்பார்கள். அவர்கள் மிகவும் இளமையாக இருப்பதால், 2021 ஆம் ஆண்டில் அவர்களால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
"எங்களிடம் மிக இளம் அணி உள்ளது. இது ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். இந்த தொற்றுநோய் விரைவில் முடிந்துவிடும் என்று நம்புகிறோம், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் ஒரு சில போட்டிகளை நடத்துவோம் என்றும் நம்புகிறோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் அவர்கள் சர்வதேச சீசனை தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் தயார் செய்ய ஒரு வருடம் உள்ளது. எனவே இந்த ஒத்திவைப்பு உண்மையில் எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் தான்" என்று அவர் கூறினார்.
"400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், ஹிமா தாஸ், அஞ்சலி தேவி மற்றும் விஸ்மயா உள்ளனர். அமோஜ் ஜேக்கப், ஏ.தருன் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டுதல் வீரர் ஜபீர் போன்ற சில இளம் வீரர்கள் உள்ளனர். எங்கள் விளையாட்டு வீரர்கள் பலர் 24 - 25 வயதிற்கு உட்பட்டவர்கள். அதனால் அவர்கள் குறைந்தபட்சம் மற்றொரு ஒலிம்பிக் போட்டியில் ஆடும் வாய்ப்பை வைத்துள்ளார்கள்" என்று கூறினார்.
இது தவிர, எங்கள் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர் இளமையாக இருப்பதால் அவர்களுக்கு 2021 இல் போட்டியிட வாய்ப்பு மட்டுமல்ல, 2024 ஆம் ஆண்டிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்" என்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications