அர்ச்சனா கிரிஷ் காமத் - இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை
விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
நாடு - இந்தியா
பிறந்த தேதி - ஜூன் 17, 2000
உயரம் - 5′5″
வசிக்கும் இடம் - பெங்களூரு
பிறந்த இடம் - விர்ரல்
ஒலிம்பிக் அனுபவம் - 2024

அர்ச்சனா கிரிஷ் காமத் வாழ்க்கை வரலாறு
அர்ச்சனா கிரிஷ் காமத், இந்தியாவின் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு இளம் டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஆவார். அவர் தனது ஒன்பதாவது வயதில் மங்களூரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்ற போது டேபிள் டென்னிஸ் விளையாட்டை பார்த்து அதை விளையாடத் துவங்கினார். பின்னர் அவருடைய பெற்றோர் தங்கள் வீட்டின் அடித்தளத்தில் ஒரு டேபிள் டென்னிஸ் மேசையை நிறுவினர். அவரை தொடர்ந்து பயிற்சி செய்ய அனுமதித்தனர்.
ஆரம்பத்தில், விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டியவர் அவரது சகோதரர் தான். இருப்பினும், அர்ச்சனா விரைவில் டேபிள் டென்னிஸ் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். "என் அண்ணன் என்னை விட விளையாட்டை மிகவும் விரும்பினார். ஆனால், நானும் அதை முயற்சித்தேன். அவர் சில சமயங்களில் வேண்டுமென்றே என்னிடம் தோற்றார். அதனால் நான் அழக்கூடாது என்று அவர் அப்படி செய்தார்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.
14 வயதிற்குள், அவர் ஜெர்மனியில் பயிற்சியாளர் பீட்டர் ஏங்கலின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார். இந்த சர்வதேச அனுபவம் அவரது திறமைகளை மேம்படுத்த உதவியது. மேலும், அவரது எதிர்கால சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தது.
பயிற்சி
தற்போது, பெங்களூரில் உள்ள படுகோன்-டிராவிட் சிறப்பு விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அவரது தனிப்பட்ட பயிற்சியாளர், போனா தாமஸ் ஜான், அவரது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். அர்ச்சனா வலது கை ஆட்டக்காரர் ஆவார். இந்தியாவின் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணிக்காக அவர் ஆடி வருகிறார்.
தாக்கங்கள் மற்றும் உத்வேகங்கள்
அவரது பெற்றோர் அவரது வாழ்க்கையில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்தனர். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு ஆதரவளித்தனர். மேலும், தொடர்ந்து ஊக்கமளித்து பயிற்சி செய்ய வைத்தனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஆகியோரையும் அவர் தனது முன் மாதிரியாக கொண்டுள்ளார் அர்ச்சனா.
கல்வி பின்னணி
அர்ச்சனா பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் லிபரல் படிப்பில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். இந்த கல்விப் பின்னணி அவரது தடகள வாழ்க்கையை நிறைவு செய்யும் வகையில் அமைந்தது, மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு அடித்தளத்தை அளிக்கிறது.