ஒலிம்பிக் டாப் 10- இந்தியாவுக்காக பதக்கம் வென்ற தந்தை-மகன்.. டென்னிசில் சரித்திரம் படைத்த லியாண்டர்
சென்னை : ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவை சேர்ந்த தந்தை, மகன் பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்திய டென்னிசில் சரித்திர நாயகன் என்றால் அது லியாண்டர் பயஸ் தான்.
கொல்கத்தாவை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி தான் டென்னிஸ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அதன்பின் சென்னையிலேயே லியாண்டர் பயஸ் வசித்து வந்தார். டென்னிசின் இரட்டையர் பிரிவில் மிகச்சிறந்த வீரராக விளங்கும் லியாண்டர் பயஸ்.

இதுவரை ஆடவர் இரட்டையர் பிரிவில் எட்டு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இதைப் போன்று டேவிஸ் கோப்பையில் அதிக முறை இரட்டைப் பிரிவில் வெற்றி பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
இப்படி பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரரான லியாண்டர் பயஸ் ஒற்றையர் பிரிவில் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்தார். இதில் ஒற்றையர் பிரிவில் பிரேசில் வீரர் பெர்னாண்டோவை மூன்றுக்கு ஆறு, ஆறுக்கு இரண்டு, ஆறுக்கு நான்கு என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையும் பயஸ்க்கு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தனிப்பட்ட பதக்கத்தை வென்ற இந்தியன் என்ற சாதனையும் லியாண்டர் பயஸ்க்கு கிடைத்தது. லியாண்டர் பயஸின் தந்தையும் ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற வீரர் என்பது இங்கு கவனிக்க வேண்டியது.
லியாண்டர் பயஸின் தந்தை மிகப்பெரிய ஹாக்கி வீரராக திகழ்ந்திருக்கிறார். 1972 ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. இதில் லியான்டர் பயஸ், தந்தையான வீஸ் பயஸ் இடம்பெற்றிருந்தார். இதன் மூலம் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்த தந்தை மகன் ஜோடி என்ற பெருமையை வியஸ் பயஸ் மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications