கடைசி நேர திக்திக்.. விசா சிக்கலால்.. டோக்கியோ பிளைட்டை தவறவிட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை.. பின்னணி
டோக்கியோ: ஒலிம்பிக் 2020 போட்டிக்கு தேர்வான இந்திய வீராங்கனை டோக்கியோ செல்ல முடியாமல் ஜெர்மனியில் சிக்கி தவித்து வருகிறார்.
ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா சார்பாக மல்யுத்த பிரிவில் வினீஷ் போகட் ஆட உள்ளார். இவர் இந்தியா சார்பாக 53 கிலோ எடை மல்யுத்த பிரிவில் ஆட உள்ளார்.
ஏற்கனவே ஆசிய கோப்பை, காமவெல்த் போட்டிகளில் இந்தியா சார்பாக தங்கம் வென்ற முதல் வீராங்கனை இவர்தான். அதேபோல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவர் இந்தியா சார்பாக வெண்கலம் வாங்கி இருக்கிறார்.

டங்கல்
இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த அமீர்கானின் டங்கல் படம் இவரின் உறவினர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். கீதா, பபிதா இரண்டு பேரும் மல்யுத்த போட்டிகளில் பெற்ற வெற்றிகளை பற்றிய படமாகும். வினீஷ் போகட், பபிதா மற்றும் கீதாவின் உறவினர் (தங்கை முறை ) ஆவார்.

விமானம்
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கலந்து கொள்ள வேண்டிய வினீஷ் போகட் நேற்று தனது விமானத்தை மிஸ் செய்தார். மல்யுத்த போட்டிக்காக ஹங்கேரியில் பயிற்சி எடுத்து வந்த வினீஷ் போகட் அங்கிருந்து விமானம் மூலம் ஜெர்மனியின் பிராங்போர்ட் சென்று இருக்கிறார். டோக்கியோ விமானம் மாறுவதற்காக வினீஷ் போகட் பிராங்போர்ட் சென்றுள்ளார்.

விசா
Schengen விசா மூலம் இவர் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளில் 90 நாட்கள் தங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய கணக்குப்படி இவர் 91 நாட்கள் தங்கிவிட்டதால் ஜெர்மனியில் அதிகாரிகள் இவரை டோக்கியோ விமானம் ஏற அனுமதிக்கவில்லை. விசா அவகாசம் முடிந்துவிட்டதால் இவரை பயணிக்க அனுமதிக்கவில்லை.

சிக்கல்
இதனால் நேற்று இரவே டோக்கியோ வர வேண்டிய வினீஷ் போகட் இதுவரை வரவில்லை. தற்போது ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக பேசி வருகிறது. இதனால் அங்கேயே தற்போது வினீஷ் முடங்கி உள்ளார்.

இன்று மாலை
இதனால் இவரின் ஒலிம்பிக் பயிற்சியில் சின்ன தடங்கல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் வினீஷ் போகட் டோக்கியோ விமானத்தை பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 5ம் தேதிதான் இவரின் போட்டி தொடங்க உள்ளதால் அதற்கு முன்பாக இவர் டோக்கியோ சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications