மும்பை : 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 நியூ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக். என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பேட்மிண்டன் அணி ஒரு பதக்கமாவது வென்று அசத்தியது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியை தழுவி வெளியேறினார்.
இந்த நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யாசன் மட்டும் வெண்கல பதக்கத்திற்கான போட்டி வரை வந்து தோல்வியை தழுவினார். இதற்கு முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன் கடும் விமர்சனம் ஒன்றை வைத்திருந்தார்.

முன்பு போல் எங்களுக்கு போதுமான பயிற்சி இல்லை. சரியான வசதி செய்து தரப்படவில்லை என்றெல்லாம் குற்றம் சாட்ட முடியாது. தற்போது அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அரசு செய்து தருகிறது. அதையும் மீறி நமது வீரர்கள் தோற்க்கிறார்கள். நாம் நான்காவது இடம் வரை வந்திருக்கிறோம். பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஒரு உத்வேகமே வீரர்களிடம் இல்லை என்று குறை கூறியிருந்தார்.
இதற்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், எங்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை பார்க்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது. ஒரு வீரர் வெற்றி பெற்றால் அனைவருமே கொண்டாடி அதற்கு நாங்கள் தான் காரணம் என்று பொறுப்பேற்று கொள்கிறீர்கள்.
அதுவே அந்த வீரர் தோற்றால் மட்டும் அனைவரும் விலகி சென்று விடுகிறீர்கள். தோற்றால் மட்டும் அது என்ன வீரர்களின் குறையா? ஏன் பயிற்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடாது? ஒரு வீரர் தோல்வியை தழுவினால் பயிற்சியாளர் போதுமான தயாரிப்பு பணிகளை வீரருக்கு செய்யவில்லை என்று தானே அர்த்தம்.
வெற்றி பெற்றால் மட்டும் அனைவரும் அதற்கான பாராட்டுகளை பெற்றுக் கொள்கிறீர்கள் தோற்கும் போது ஏன் யாருமே அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஒரு அணியாக கூட்டு முயற்சியுடன் வெற்றியைப் பெற வேண்டிய விளையாட்டு. வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் அது ஒரு அணியின் பொறுப்பு தான். தோல்வியை தழுவி விட்டோம் என்பதற்காக வீரர்களை பலிகடாவாக்கி அவர்கள் மீது குறை சொல்லக்கூடாது என்று அஸ்வினி பொன்னப்பா கூறியுள்ளார்.