200 மீட்டர் ஓட்டப்பந்தயம்.. நோவா லைல்ஸ்-க்கு அதிர்ச்சி.. தங்கம் வென்ற போட்ஸ்வானா வீரர் டிபோகோ!
பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் போட்ஸ்வானா வீரர் டிபோகோ தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு பின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 200 மீ ஓட்டப்பந்தயம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏனென்றால் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 9.79 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 வினாடிகளுக்குள் பந்தயத் தூரத்தை கடந்திருந்தனர். இதனால் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை நோவா லைல்ஸ் வெல்வது கடினமாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில் அமெரிக்காவில் நோவா லைல்ஸ், கென்னி பெட்னரெக், எரியன் நைட்டென், டாமிக்கன் குடியரசு நாட்டின் ஒகாண்டோ, ஜிம்பாப்வேவின் மக்கராவ் மற்றும் சரம்பா, லைபீரியாவின் ஜோசப் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அமெரிக்காவின் நோவா லைல்ஸை பின்னுக்கு தள்ளி போட்ஸ்வானாவின் டிபோகோ 19.46 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதன்பின் அமெரிக்காவின் கென்னி பெட்னரெக் 19.62 வினாடிகளில் பந்தயத் தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்பின் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 19.70 வினாடிகளில் பந்தயத் தூரத்தை கடந்து வெண்கலத்தை கைப்பற்றினார். இதன் மூலமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் நோவா லைல்ஸ் 2வது பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இருப்பினும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்ற அவர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகின் வேகமாக மனிதன் நோவா லைல்ஸ் மட்டும் தானா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் கடைசியாக ஜிம்பாப்வேயின் சரம்பா 20.53 வினாடிகளில் ஓடி முடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications