Olympics 2024: காதலருடன் ஊர் சுற்றிய வீராங்கனை.. இரவு நேரத்தில் எங்க போனீங்க? டென்ஷனான நிர்வாகிகள்!
பாரிஸ்: 33வது பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பதக்கத்தை வெல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கடுமையாக போராடி வருகின்றனர். அதேபோல் ஒலிம்பிக் தொடரில் சர்ச்சைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஏற்கனவே பெண்களை அநாகரிகமாக பேசிய வர்ணனையாளரால் பல்வேறு தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
தற்போது பிரேசில் ஒலிம்பிக் அணியில் உள்ள தடகள வீராங்கனை ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த ஒலிம்பிக் தொடரில் பிரேசில் இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என்று 4 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 23வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் பிரேசில் நீச்சல் வீராங்கனை கரோலினா நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளார்.

ஜூலை 27ஆம் தேதி கரோலினா 4x100 மீட்டர் நீச்சல் ரிலே போட்டியில் தகுதிச்சுற்றில் கலந்து கொண்டார். அதேபோல் சக நீச்சல் வீரரான கேப்ரியல் சாண்டோஸ் 4x100 நீச்சல் போட்டியில் தோல்வியடைந்தார். இந்த போட்டி நடப்பதற்கு முதல் நாள் இரவில் இவர்கள் இருவரும் அனுமதியின்றி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இதுகுறித்து விசாரிக்கையில், கரோலினா தனது காதலருடன் நேரம் செலவிட சென்றது தெரிய வந்துள்ளது. தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கரோலினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அப்போது கேப்ரியல் சான்டோஸையும் உடன் அழைத்து சென்றது தெரிய வந்தது. இந்த விவகாரம் பிரேசில் முகாமிற்கு தெரிய வந்து புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் இருவரிடமும் விசாரிக்கப்பட்ட போது, கேப்ரியல் சாண்டோஸ் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார். இதனால் அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்காமல் பிரேசில் ஒலிம்பிக் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கரோலினா மன்னிப்பு கோராமல், தவறு செய்யவில்லை என்று வாதிட்டுள்ளார். ஆனால் அவரின் இன்ஸ்டாகிராமிலேயே ஆதாரம் இருந்ததாக கூறியுள்ளனர்.

இதன்பின் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக உடனடியாக கரோலினா பிரேசிலுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்ல ஏராளாமான வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு சூழலில், போட்டிக்கு முதல்நாள் இரவு காதலருடன் நேரம் செலவிட சென்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications