பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 100 மீ ஓட்டப் பந்தயத்திற்கான இறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ், ஜமைக்காவின் கிஷேன் தாம்சன், அமெரிக்காவின் கென்னத் பெட்னரெக், ஃப்ரெட் கெர்லி, தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன், இமைக்காவின் செவில், போட்ஸ்வானாவின் டிபோகோ மற்றும் இத்தாலியின் ஜாகப்ஸ் களம் புகுந்தனர்.
இதில் ஒவ்வொரு வீரரும் அதிரடியான என்ட்ரியுடன் களம் புகுந்த போது, அமெரிக்காவின் நோவா லைல்ஸ் மட்டும் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் களத்திற்கு வந்தார். கிட்டத்தட்ட சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது நான் தான் என்று சொல்வதை போல் அவரின் கொண்டாட்டம் இருந்தது. இதன்பின் ஒவ்வொரு வீரரும் தங்களின் வரிசையில் சென்று நின்றனர்.

கிட்டத்தட்ட 7 நிமிடம் அவர்கள் அனைவரும் நிற்க வைக்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக 100 மீ ஓட்டப் பந்தயம் தொடங்கியது. துப்பாக்கிச் சத்தம் கேட்ட நொடியில் அனைவரும் எழுந்து ஓட தொடங்கினர். அப்போது நோவா லைல்ஸ் முதல் 30 மீட்டர் வரை 8வது இடத்தில் தான் இருந்தார். மறுபக்கம் ஜமைக்காவின் தாம்சன் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் 50 மீ தூரம் கடந்த பின் நோவா லைல்ஸ் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். இறுதியாக தாம்சன், நோவா லைல்ஸ், கெர்லி ஆகியோர் ஒரே நொடியில் இலக்கை எட்டியதை போல் தெரிந்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களும் யாருக்கு பதக்கம் என்பதை அறிய ஸ்க்ரீனை பக்கம் கண் பார்வையை திருப்பினர்.
அப்போது அமெரிக்காவின் நோவா லைல்ஸ்-க்கு தங்கப் பதக்கம் உறுதியானது தெரிய வந்தது. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 9.79 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். தற்போது 100 மீ ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டமும் இவரிடம் தான் உள்ளது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, உலகின் மிகவும் வேகமாக ஓட்டப்பந்தய வீரர் நான் தான் என்று கூறியிருந்தார்.
தற்போது சொன்னதை போல், செயலிலும் செய்து காட்டியுள்ளார். இவருக்கு பின் வெள்ளிப் பதக்கம் ஜமைக்காவின் தாம்சனுக்கு அறிவிக்கப்பட்டது. அவரும் 9.79 நொடிகளில் தான் பந்தய தூரத்தை எட்டியுள்ளார். ஆனால் இருவருக்கும் இடையில் 0.784 நொடிகள் வித்தியாசம் இருந்ததால், தங்கப் பதக்கம் நோவா லைல்ஸ்-க்கு சென்றுள்ளது. பின்னர் 9.81 நொடிகளில் வந்த அமெரிக்காவின் கெர்லிக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.