திடீரென அதிகரித்த 2.8 கிலோ எடை.. ஒருநாள் இரவில் 2.6 கிலோ எடை குறைத்த வினேஷ் போகத்.. என்ன நடந்தது?
பாரிஸ்: தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், திடீரென ஒலிம்பிக் நிர்வாகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிபெற்று வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக வினேஷ் போகத்தின் உடல் எடை 49.90ஆக இருந்தது. ஆனால் அரையிறுதி போட்டி முடிவடைந்த பின் வினேஷ் போகத் தனது எடையை சோதனை செய்துள்ளார். அப்போது வினேஷ் போகத் உடல் எடை 52.7 கிலோவாக உயர்ந்திருக்கிறது. இதனை உடனடியாக பயிற்சியாளர்கள் குழுவிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன்பின் உடனடியாக வினேஷ் போகத்தின் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் பயிற்சியாளர்கள் குழு ஈடுபட்டிருக்கிறது. வினேஷ் போகத்திற்கு இரவில் கொஞ்சம் கூட உணவோ, துளியளவு தண்ணீரோ கூட கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இரவு முழுக்க உடற்பயிற்சியும் அளித்துள்ளனர்.
சைக்கிளிங், ஜாக்கிங் என்று அதிகளவு வியர்வையை வெளியேற்றும் வகையிலான உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வினேஷ் போகத்தின் உடலில் இருந்து இரத்தம் கூட எடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் இன்று காலை நீராவி மூலமாக உடலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதன்பின் உடலில் வியர்வை வெளி வராதது தெரிய வந்துள்ளது.
இதன்பின் வினேஷ் போகத்தின் தலைமுடியையும் வெட்டியுள்ளனர். இத்தனை செய்தும் வினேஷ் போகத்தின் உடல் எடை 50.1 கிலோவாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒருநாள் இரவில் வினேஷ் போகத் 2.6 கிலோ எடையை உடலில் குறைத்துள்ளார். இத்தனை செய்தும் 100 கிராம் அதிகமாக இருந்ததால், ஒலிம்பிக் நிர்வாகத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத்திற்கு இன்னும் சில மணி நேரங்கள் கிடைத்திருந்தால், எளிதாக 100 கிராம் எடையை குறைத்திருக்க முடியும்.
மல்யுத்த கூட்டமைப்பு விதிகளின் படி போட்டியில் பங்கேற்கும் நாளன்று காலையில் வீரர் அல்லது வீராங்கனையின் உடல் எடை டெஸ்ட் செய்யப்படும். இதனால் எடை சோதனையில் தோல்வியடைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன்பின் வினேஷ் போகத்துக்கு நீர்ச்சத்து குறைப்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு க்ளூகோஸ் ஏற்றப்பட்டது. இதன்பின் ஏமாற்றத்துடன் வினேஷ் போகத் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications