ரியல் சிங்கப்பெண்யா.. 3வது பதக்கம் லோடிங்.. மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மனு பாக்கர்!
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 3வது பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலமாக டோக்கிய ஒலிம்பிக்கில் அடைந்த தோல்விக்கு பின் மனு பாக்கர் மாஸ் கம்பேக்கை கொடுத்ததாக பார்க்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இருவரும் வெண்கலம் வென்று அசத்தினர். இதன் மூலமாக மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் அடுத்த வெற்றியை நோக்கி மனு பாக்கர் தயாராகி வந்தார். அதாவது 25 மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் பங்கேற்பது தெரிய வந்தது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடந்த நிலையில், டாப் 8 இடங்களில் முடித்த மனு பாக்கர், இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். 2 தகுதிச் சுற்றிலும் 294 மற்றும் 296 புள்ளிகளை பெற்று அசத்தினார்.
இதற்கான இறுதிப் போட்டி நாளை பகல் 1 மணிக்கு நடக்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் மனு பாக்கர் நிச்சயம் 3வது பதக்கத்தை வெல்வார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இம்முறை வெண்கலப் பதக்கம் அல்லாமல் தங்கத்தை வென்று அசத்த வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முகமாக மாறியுள்ளார். நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் 3வது பதக்கத்தை மனு பாக்கர் வெல்லும் பட்சத்தில், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயராக உருவெடுப்பார். 22 வயதில் மனு பாக்கர் படைத்துள்ள சாதனைகள், இளைஞர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications