பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் நோவா லைல்ஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பின்பும் அவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் போது கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது.
இதனால் தொடரே ஒரு ஆண்டு கழித்து தான் நடைபெற்றது. இதனால் வீரர்களுக்கு அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தடுப்பூசி காரணமாக அதன் தீவிரம் குறைந்தாலும் மனிதர்களின், செயல்திறனை பாதிக்கும் அளவுக்கு தான் இருக்கின்றது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக நடக்க கூட கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தும் நிலையில், இங்கு அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் தான் கொரோனா பாதிக்கப்பட்டும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற நோவா லைல்ஸ் பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.
இந்த நிலையில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்று நோவா லைல்ஸ் உசைன் போல்ட்டின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் போஸ்ட்வன்யா நாட்டை சேர்ந்த டெபுகோ பந்தய தூரத்தை 19.46 தூரத்தை கடந்து தங்க பதக்கத்தை வென்றார். அமெரிக்க வீரர் பெட்நரக் 19 புள்ளி 6 2 வினாடிகள் கடந்து வெள்ளி பதக்கமும், நோவா லைல்ஸ் 19.70 வினாடிகள் கடந்து வெண்கல பதக்கமும் கைப்பற்றி இருக்கிறார்.
போட்டி முடிந்தவுடன் நோவா லைல்ஸ் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு மைதானத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா பாதிப்பு நிச்சயம் என்னுடைய செயல் திறனை கடுமையாக பாதித்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் நான் இன்று தான் ஓரளவுக்கு எழுந்து நிற்கின்றேன். இரவு முழுவதும் இருமல் இருந்து கொண்டே இருந்தது. இதை அனைத்தையும் மீறி கோவிட் பாதிக்கப்பட்டும் இன்று நான் வெண்கல பதக்கம் வென்றிருப்பதை நினைத்து பெருமை கொள்கின்றேன்.
200 மீட்டர் பந்தயத்தை ஓடி முடித்த பிறகு எனக்கு மூச்சுத் திணறல், நெஞ்சுவலி என அனைத்தும் இருந்தது. தற்போது நான் பரவாயில்லை. ஒலிம்பிக்கல் சாதிக்க வேண்டும் என்பது என்னுடைய சிறு வயது கனவு. அதற்கு கோவிட் தடையாக இருக்கக் கூடாது என்பதால் தான் நான் கலந்து கொண்டேன்.
தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது எனது குடும்பத்தினருக்கும் பயிற்சியாளருக்கும் மருத்துவர் நிபுணர்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் பயந்து விடக்கூடாது என்பதால் நான் யாரிடமும் சொல்லவில்லை. அதே சமயம் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது என்று தெரிந்தால், மற்ற வீரர்களுக்கு அது சாதகமாக அமைந்துவிடும் என்றும் நோவா லைல்ஸ் கூறியுள்ளார்.