பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்தியா சார்பாக துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தென் கொரியாவின் ஓ யி ஜின் - லீ இணை 16-10 என்ற புள்ளிகளில் இந்திய இணை வீழ்த்தியது. இதன்பின் இந்தியா வந்த மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணைக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 22 வயதாகும் சரப்ஜோத் சிங் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள தீன் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது வருகையின் போது குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவரும் இணைந்து பட்டாசு வெடித்து தோளில் தூக்கி வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் சரப்ஜோத் சிங்கின் சாதனையை பாராட்டி ஹரியானா மாநில அரசு தரப்பில் விளையாட்டுத் துறைக்கான துணை இயக்குநர் பணி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
ஆனால் அரசுப் பணியை ஏற்காமல், உதறித் தள்ளியுள்ளார் சரப்ஜோத் சிங். இதுகுறித்து சரப்ஜோத் சிங் பேசுகையில், இந்த அரசுப் பணி சிறந்த ஒன்று தான். ஆனால் இந்த பணியை இப்போது செய்ய விரும்பவில்லை. எனது துப்பாக்கிச் சுடுதல் திறனில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற விரும்புகிறேன். எனது குடும்பத்தினரும் அரசுப் பணியை ஏற்குமாறு கேட்டு கொண்டனர்.
ஆனால் துப்பாக்கிச் சுடுதலில் கவனம் செலுத்த விரும்புகிறேன். வாழ்க்கையில் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கு எதிரான பாதையில் மனம் ஏற்கவில்லை. அதனால் அரசுப் பணியை ஏற்கப் போவதில்லை. எனது முக்கிய இலக்கை இன்னும் அடையவில்லை. 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் தொடரில் அதனை எட்டுவேன் என்று நம்பிக்கை உள்ளது.
பாரிஸ் வருவதற்கு முன்பாக எனது டைரியில், சிறந்த ஆட்டத்தை செயல்படுத்துவேன் என்று எழுதியிருந்தேன். எனது பார்வையில் இன்னும் முழு திறனையும் வெளிப்படுத்தவில்லை. 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வரை தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.