பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஒவ்வொரு நாளும் ஒரு சர்ச்சை உருவாகி வருகிறது. இந்தியாவின் அன்டிம் பங்கலின் சகோதரி பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இதன்பின் அன்டிம் பங்கலின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையை அந்த நாட்டு ஒலிம்பிக் அணி நிர்வாகிகளே வீட்டிற்கு அனுப்பவுள்ளது தெரிய வந்துள்ளது. பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலான்சோ. 20 வயதாகும் இவர், ஒலிம்பிக் தொடரின் நீச்சல் பிரிவில் 100 மீ பட்டர்ஃபிளை போட்டியில் பங்கேற்றார். அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை 0.24 நொடிகளில் தவறவிட்டுள்ளார்.

இதன் மூலம் லுவானா அலான்சோவின் ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வந்தது. விளையாட்டு வீரர்கள் போட்டிகள் முடிவடைந்தாலும், ஒலிம்பிக் கிராமத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக லுவானா ஒலிம்பிக் கிராமத்திலேயே தங்கி சக போட்டியாளர்களின் போட்டிகளை கண்டு ரசித்து, ஊர் சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென லுவானாவை அந்நாட்டு நிர்வாகிகள் சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்கையில், லூவானா அலான்சோவின் அழகு சக வீரர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுயக் கட்டுப்பாடு கூட இல்லாமல் விளையாட்டு வீரர்களால் எப்படி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தை வெல்ல முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் கடுப்பான லுவானா அலான்சோ, நான் அதிகாரப்பூர்வமாக நீச்சல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.