ஒலிம்பிக் - போல் வால்ட்டில் உலக சாதனை.. தங்கம் வென்ற பிறகு காதலிக்கு முத்தம் - வீடியோ
பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் போல் வால்ட் விளையாட்டில் சுவீடன் வீரர் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படி பல சாதனைகளை படைத்து இருக்கிறாரோ, அதேபோல் போல் வால்ட் என்ற விளையாட்டு தற்போதைய உக்கரைன் நாட்டைச் சேர்ந்த sergei Bubka என்ற வீரர் பல ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார்.
போல் வால்ட்டின் நாயகன் என ரசிகர்களால் வர்ணிக்கப்படுவார். இந்த நிலையில் அவருக்கு பிறகு தற்போது புதிய சூப்பர் ஸ்டார் ஆக உருவெடுத்து இருக்கிறார் சுவீடன் நாட்டை சேர்ந்த டுப்லாண்டிஸ். அமெரிக்காவில் பிறந்தாலும் தனது தாயார் சுவீடனை சேர்ந்தவர் என்பதால் அந்த நாட்டிற்காக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

24 வயதிலேயே போல் வால்டில் பல்வேறு சாதனைகளை டுப்லாண்டிஸ் படைத்திருக்கிறார். 24 வயதில் இரண்டு முறை உலக சாம்பியன், இரண்டு ஒலிம்பிக் தங்கம் என பல உலக சாதனைகளை டுப்லாண்டிஸ் படைத்திருக்கிறார். போல் வால்ட்டில் ஆறு மீட்டர் உயரத்தை தாண்டுவது என்பது யாராலும் முடியாத காரியம்.
ஆனால் இவர் ஆறு மீட்டர் உயரத்தை இதுவரை 60 முறை வெற்றிகரமாக தாண்டி இருக்கிறார். இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் போல் வால்ட் இறுதிச்சுற்றில் எந்த ஒரு வீரரும் ஆறு மீட்டரை தொடாத நிலையில் டுப்லாண்டிஸ் மட்டும் ஆறு மீட்டர் மேல் வெற்றிகரமாக தாண்டி சாதனை படைத்து வந்தார். டுப்லாண்டிஸ், தாம் தங்கம் வெல்லப் போகிறார் என தெரிந்தும் ஒவ்வொரு முயற்சியிலும் தன்னுடைய உயரத்தை அவர் கூட்டிக் கொண்டே வந்தார்.
தங்கம் வென்று விட்டோம் என அமைதியாக இல்லாமல் தன்னுடைய உலக சாதனையை தாமே முறியடிக்க வேண்டும் என முயற்சியில் அவர் இறங்கினார். இறுதியாக 6.25 மீட்டர் உயரத்தை கம்பியை வைத்து அவர் தாண்ட முயற்சி செய்தார். முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வியை தழுவினாலும், மூன்றாவது முறையாக அவர் வெற்றிகரமாக தாண்டி புதிய உலக சாதனை படைத்தார்.
இதனை அடுத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட டுப்லாண்டிஸ் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த தன்னுடைய காதலியை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்தார். அதன் பிறகு தனது குடும்பத்தினரை கட்டிப்பிடித்து தனது உலக சாதனையை பகிர்ந்து கொண்டார். தங்கம் வென்று விட்டோம் என்று விடாமல் தொடர்ந்து ரெகார்ட் படைத்து வந்த டுப்லாண்டிசை தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் வென்றவர்களும் டுப்லாண்டிஸ் ரெக்கார்டை பார்த்து ஆச்சரியப்பட்டு அவரை கட்டி அணைத்து பாராட்டினர். ஓட்டப்பந்தயத்தில் எப்படி உசைன் போல் பல ரெகார்டை படைத்திருக்கிறாரோ, அதேபோல் போல் வால்ட்டில் ஜாம்பவானாக 24 வயதில் டுப்லாண்டிஸ் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications