ராமாயணம், மகாபாரதமே காரணம்.. 5 வயதில் தொடங்கிய பயணம்.. அமெரிக்காவை பதற வைத்த இந்திய வீரர் தீரஜ்!
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 22 வயதாகும் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா - அங்கிதா பகத் இணை இந்தியா சார்பாக களமிறங்கியது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, கொரியாவிடம் தோல்வியடைந்தது.
அதன்பின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்ட இந்திய இணை தோல்வியை சந்தித்தது. இதில் தீரஜ் பொம்மதேவரா ஒவ்வொரு முறை அம்பை எய்த போதும் 10 புள்ளிகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொண்டே வந்தார். ஆனால் மறுபக்கம் அங்கிதா பகத் பதற்றத்தில் 2 முறை 8 புள்ளிகளையும், ஒரு முறையும் 7 புள்ளிகளையும் எடுத்தார்.

இதன் காரணமாகவே இந்தியாவின் பதக்கக் கனவு சோகத்தில் முடிந்தது. இருந்தாலும் தீரஜ்-ன் கன்சிஸ்டன்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 22 வயதாகும் தீரஜ் பொம்மதேவரா நிச்சயம் 2028ல் அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக் தொடரில் பதக்கத்தை வெல்வார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த தீரஜ் பொம்மதேவரா ராணுவ வீரராக பணியாற்றி வருபவர்.
வில்வித்தை விளையாட்டு நிர்வாகியான இவரின் தந்தை, சிறு வயதிலேயே தீரஜ் பொம்மதேவரா கைகளில் வில்லையும், அம்பையும் கொடுத்துள்ளார். 5 வயதில் தொடங்கிய பயணம், 22 வயதில் ஒலிம்பிக் தொடர் வரை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஆசியப் போட்டிகளில் வெள்ளி வென்ற இவர், அடுத்த இலக்கை நோக்கி தீவிரமாக பயணித்து வருகிறார்.
வில்வித்தையில் ஆர்வம் வந்தது எப்படி என்பது குறித்து தீரஜ் பொம்மதேவரா பேசுகையில், ராமாயணமும், மகாபாரதமும் தான் வில்வித்தை மீது ஆர்வம் வருவதற்கு காரணமாக அமைந்தது. அந்த கதைகளில் வில்லையும், அம்பையும் வைத்து சொல்லப்பட்ட கதைகள் மனதில் தீவிரமாக பதிந்தது. அதேபோல் தனது பயிற்சிக்காகவும், உபகரணங்களுக்காகவும் அம்மாவின் நகைகளை விற்று தனது தந்தை செலவு செய்ததாக தெரிவித்தார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியின் போது கூட எந்தவித பதற்றமும் இல்லாமல், சாதாரணமாக கண்ணாடி அணிந்துகொண்டு 10 புள்ளிகளை தொடர்ச்சியாக தீரஜ் பொம்மதேவரா பெற்றது இந்திய இளைஞர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றே சொல்ல முடியும். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது வேலையை சிறப்பாக செய்த தீரஜ், வில்வித்தையில் இந்தியாவின் முகமாக நிச்சயம் மாறுவார் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications