மும்பை : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி ஒட்டுமொத்தமாகவே மூன்று பதக்கம் தான் வென்று இருக்கிறது. 117 வீரர் வீராங்கனைகள் சென்றும் இந்திய அணி பல போட்டிகளில் நான்காவது இடத்தை பிடித்து தோல்வியை தழுவியது. இந்த சூழலில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகட் எடை கூடியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதனால் இந்திய ரசிகர்கள் மனம் உடைந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை ஈட்டி எறிதலில் வீரர் நீரஜ் சோப்ரா தான் பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நீரஜ் சோப்ராவின் ஆட்டம் இன்று இரவு 11:50 மணிக்கு தொடங்குகிறது.

இதனால் நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் பிரார்த்தனையும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரிஷப் பண்ட், ஒரு காரியத்தை செய்து இருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றால் எனது ட்வீட்டை லைக் செய்து அதிகமாக கமெண்ட் செய்யும் நபர்களை தேர்ந்தெடுத்து அதில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ஒரு லட்சத்து 89 ரூபாய் ரொக்கமாக நான் பரிசு தருகிறேன்.
என்னுடைய கவனத்தை ஈர்க்கும் அடுத்த 10 பேருக்கு நான் இலவச விமான டிக்கெட்டுகளை வாங்கி தருகிறேன். என்னுடைய சகோதரன் நீரஜ் சோப்ராவுக்காகவும் நமது இந்தியாவுக்காகவும் ஆதரவு அளிப்போம் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ரிஷப் பண்டின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ரிஷப் பண்ட் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
மற்ற போட்டிக்காக கிரிக்கெட் வீரர் குரல் கொடுப்பது ஒரு நல்ல விஷயம் என்றும் பலரும் பாராட்டு வருகின்றனர். ஒலிம்பிக் தொடரில் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாக செயல்பட்டு 89.94 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இதன் மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல் சுற்றில் அதிக தூரம் வீசிய வீரர்களில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்திருக்கிறார் என்பதால் அவர் தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.