பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலோ கரிணி மற்றும் அல்ஜீரியா வீராங்கனை இமான் கலீஃப் மோதினர். இந்த போட்டி தொடங்கிய 46 நொடிகளில் போட்டியில் இருந்து விலகுவதாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலோ கரிணி நடுவரிடம் கூறிவிட்டு கண்ணீருடன் வெளியேறினார்.
அதுமட்டுமல்லாமல் இமான் கலீஃப் ஒரு பெண்ணே கிடையாது என்றும், அவர் பாலினத்தை ஏமாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அவரின் ஒரு குத்தை கூட தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று செய்தியாளர்களிடம் கண்ணீர்விட்டு ஏஞ்சலோ கரிணி அழுத காட்சிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் ஏஞ்சலோ கரிணிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இமான் கலீஃப் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது முதல்முறையல்ல. ஏற்கனவே 2023ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது எடுக்கப்பட்ட பாலின சோதனையில் இமான் கலீஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் 2022ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற அவர், டெல்லியில் நடக்கவிருந்த தங்கப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்ணயித்துள்ள விதிகளில் கலீஃப் பொருந்தாததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இருப்பினும் அவருக்கு ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து விளையாட அனுமதி அளித்தது. தற்போது மீண்டும் இமான் கலீஃப் பாலினம் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், பலரும் இமான் கலீஃப்-க்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். அதாவது 14 வயதில் இருந்தே இமான் கலீஃப் குத்துச்சண்டை பயிற்சியை தொடங்கியுள்ளதால், அவர் உடல் கூடுதல் வலிமையுடன் உள்ளது. அல்ஜீரியாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற சோதனைகளை இமான் கலீஃப் தொடக்க காலம் முதலே பார்த்து வருவதாகவும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், இத்தாலி வீராங்கனை ஏஞ்சலோ கரிணி வெறும் 46 நொடிகளில் கலீஃப் பெண் கிடையாது என்பதை எப்படி கண்றிந்தார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் போட்டிக்கு முன்பாகவே ஏஞ்சலோ கரிணி ஆட்டத்தை நிறுத்தும் முனைப்புடன் தான் களமிறங்கியுள்ளதாக விமர்சனங்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன.
இதனிடையே இத்தாலி வீராங்கனை ஏஞ்சலோ கரிணியின் பயிற்சியாளர் ரென்சினி பேசுகையில், கரிணியின் மூக்கு உடைந்ததா என்பது குறித்து இன்னும் முழுமையாக தெரியாது. போட்டி தொடங்கிய சில நொடிகளில் என்னிடம் அவர் பேசிய போது, உனக்கு விருப்பமில்லை என்றால், பின் வாங்குவதில் எந்த தவறும் இல்லை என்று அறிவுறுத்தினேன். ஆனால் அவர், இந்த ஒலிம்பிக் தொடரில் விளையாடுவதற்காக உழைத்துள்ளேன். பதக்கத்திற்காக போராடுவேன் என்று கூறினார். ஆனால் ஆட்டம் இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.