பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற 4வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கமும், கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் 88.54 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெண்கலமும் வென்று சாதனை படைத்தனர். கிரிக்கெட், ஹாக்கியை தொடர்ந்து ஒலிம்பிக் களத்திலும் இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக மோதிக் கொண்டது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதனை விடவும் களத்திலும் இந்தியாவின் நீரஜ் சோப்ராவும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் நட்புடன் இருந்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து நீரஜ் சோப்ரா பேசுகையில், இந்தியாவுக்காக மீண்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே மகிழ்ச்சி தான். ஆனால் எனது ஆட்டத்தினை மேம்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறேன். இந்த ஒலிம்பிக்கில் எனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினேன்.
ஆனால் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்காமல் போயிருக்கலாம். ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் ஒலிக்கும். விளையாட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒருநாள் அவருக்கானதாக இருக்கும். இந்த நாள் அர்ஷத் நதீமுக்கானது. மனதளவிலும், உடலளவிலும் நன்றாக இருக்கிறேன். ஆனால் எனது சிறந்த ஆட்டம் இனிதான் வெளிப்படும்.
இன்னும் உடலளவிலும், மனதளவிலும் அதிக நம்பிக்கை பெறும் போது, அடுத்த இலக்கை எட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். ஜூனியர் லெவலில் இருந்தே நீரஜ் சோப்ராவும், அர்ஷத் நதீமும் ஒன்றாக போட்டியிட்டு வருகின்றனர். அர்ஷத் நதீமின் ஸ்பான்சர்ஷிப்பிற்காக கூட நீரஜ் சோப்ரா குரல் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஈட்டி எறிதலில் இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் 2 இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று அர்ஷத் நதீம் கூறியிருந்தார். அது ஒலிம்பிக் அரங்கிலேயே நிறைவேறி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.