இரவு முழுவதும் தொடர்ந்த போராட்டம்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினேஷ் போகத்.. என்ன நடந்தது?
பாரிஸ்: இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் உடல் எடையை குறைக்க வினேஷ் போகத் பயிற்சி மேற்கொண்ட நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், திடீரென ஒலிம்பிக் நிர்வாகத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் உடல் எடை சோதனை செய்யப்படும். அதன்படி வினேஷ் போகத் உடலின் எடையை இன்று காலை சோதிக்கப்பட்டுள்ளது.

அப்போது வினேஷ் போகத்தின் உடல் எடை 100 கிராம் முதல் 150 கிராம் வரை அதிகரித்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் நேற்றிரவே வினேஷ் போகத், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக நேற்றிரவு முதல் வினேஷ் போகத் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். உணவு கூட உட்கொள்ளாமல் சைக்கிளிங், ஓட்டப்பந்தயம் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் வினேஷ் போகத்தின் உடல் எடையை குறைகக் நீராவி குளியலிலும் பயிற்சியாளர்கள் உட்படுத்தியுள்ளனர்.
இதன் மூலமாக வினேஷ் போகத்தின் வியர்வை வெளியேறுவதன் மூலமாக உடல் எடை குறையும் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக 1.85 கிலோ உடல் எடையை வினேஷ் போகத் குறைத்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தவித்த நிலையில், ஒலிம்பிக் நிர்வாகம் தரப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினேஷ் போகத் இரவு முழுவதும் பயிற்சிய் மேற்கொண்டதால், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரின் உடலுக்கு க்ளூகோஸ் அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications