மும்பை : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிருக்கான மல்யுத்த இறுதி போட்டிக்கு வினேஷ் போகத் தகுதி பெற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் மிஸ் ஆனது.
இதனை எதிர்த்து வினேஷ் போகத் சார்பில் சர்வதேச விளையாட்டு துறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதிலும் வினேஷ் போகத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த சூழலில் வினேஷ் போகத்துக்கு இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவரான பிடி உஷா எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வெளியாகியிருக்கிறது.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பங்கு பெற்று பேசிய வினேஷ் போகத், நான் மருத்துவமனை படுக்கையில் இருக்கிறேன். எனக்கு வெளியே என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. என் வாழ்க்கையில் மிகவும் ஒரு மோசமான தருணத்தை நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன். அப்போது அனைவரும் என் அருகே வந்து நின்று கொண்டு ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அது மட்டுமில்லாமல் என்னுடைய அனுமதி இல்லாமலேயே என் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்கள். இதற்குப் பெயர் உங்களுடன் தோள் நிற்கிறேன் என்பதற்கான பொருள் கிடையாது. இது வெறும் போஸ் கொடுக்க தான் செய்யப்பட்டது. நான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு எனக்கு எந்த ஒரு ஆதரவும் பாரிஸில் கிடைக்கவில்லை.
பிடி உஷா என்னை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். என்னுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். அரசியலில் திரை மறைவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை போல் தான் பாரிஸில் மிகப்பெரிய அரசியல் நடந்திருக்கிறது. இதனால் தான் என்னுடைய இதயம் நொறுங்கிப் போனது. பல மக்கள் என்னிடம் மல்யுத்தத்தை விட்டு விலகி செல்லாதீர்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் நான் ஏன் அதில் தொடர வேண்டும். அரசியல் அனைத்து இடத்திலுமே இருக்கிறது என்று வினேஷ் போகத் அந்த பேட்டியில் கூறினார். எடை குறைக்க வினேஷ் போகத் தனது தலைமுடியை வெட்டிய நிலையில் மருத்துவமனையில் மிகவும் மோசமான சூழலில் இருந்தார். அப்போது அவரின் அனுமதி இன்றி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பிடி உஷா தரப்பினர் போட்டிருக்கிறார்கள்.
வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டு படி வெறும் புகைப்படம் எடுத்துக் கொண்டு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று ஒரு மாயை மட்டும் உருவாக்கி இருக்கிறார்கள். தவிர வினேஷ் போகத் எடையை குறைக்கவும் இல்லை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் எந்த ஒரு உதவியும் இந்திய மல்யுத்த சம்மேளனம் செய்யவில்லை என தெரிகிறது. வினேஷ் போகத் விவகாரத்தில் ஏதேனும் சதி நிகழ்ந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
இந்த சூழலில் தான் மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் வினேஷ் போகத் தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த வினேஷ் போகத், ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. வினேஷ் போகத் பாஜகவின் அப்போதைய எம்பி யும் முன்னாள் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் வினேஷ் போகத் பல்வேறு தடைகளை சந்திக்க நேர்ந்தது. இந்த தடையெல்லாம் உடைத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் எடை கூடியதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் தற்போது வினேஷ் போகத் அரசியலில் குதித்திருக்கிறார்.