பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய வினேஷ் போகத், ஒரே நாளில் 3 போட்டிகளை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதனால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்துடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென நேற்று காலை 50.100 கிலோ எடை இருப்பதாக கூறி ஒலிம்பிக் நிர்வாகத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நேற்று முன் தினம் போட்டி முடிவடைந்த போது வினேஷ் போகத்தின் உடல் எடை 52.7 கிலோ அதிகரித்ததாகவும், அதன்பின் இரவு முழுவதும் உடற்பயிற்சி உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு, தலை முடியை வெட்டியும் 2.6 கிலோ எடையை குறைக்க முடிந்துள்ளது.

இதனால் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பதக்கமும் இல்லாமல் வெளியேற்றப்படுவதும் தெரிய வந்தது. இதன் காரணமாக வினேஷ் போகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைத்து தரப்பினரும் ஆறுதல் கூறி வந்தனர். இந்திய ஒலிம்பிக் நிர்வாகிகளும் வினேஷ் போகத்தை நேரில் சந்தித்து உடல் மற்றும் மனதளவில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வினேஷ் போகத் ஒலிம்பிக் தொடரில் தனக்கு வெள்ளிப் பதக்கம் கொடுக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை வினேஷ் போகத் தனது சோசியல் மீடியா பக்கத்தில், மல்யுத்தம் என்னை வீழ்த்திவிட்டது.. என்னை மன்னிக்கவும்.. எனது கனவுகள் சிதைந்துவிட்டன.. என் மனதைரியமும், நம்பிக்கையும் உடைந்துவிட்டன..
இனியும் போராட என்னிடம் வலிமை இல்லை. மல்யுத்தத்திற்கு குட் பை.. எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.. மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 ஒலிம்பிக் தொடர்களில் விளையாடியுள்ள வினேஷ் போகத், ஓய்வை அறிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு வெண்கலம் மற்றும் ஆசியப் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷுப் ஆகியவற்றை வென்று சாதனை படைத்தவர் வினேஷ் போகத். கடந்த 18 மாதங்களில் ஏராளமான போராட்டங்களை சந்தித்த வினேஷ் போகத், ஒலிம்பிக் பதக்கம் வெல்வதில் தீவிரமாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நடந்த திருப்பங்களில், பதக்க கனவுடன் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.