Olympics 2024: தங்க மகன் நீரஜ் சோப்ரா பயன்படுத்தும் ஈட்டியின் எடை என்ன? மிரண்டுபோன தினேஷ் கார்த்திக்
பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா பாரிஸ் நகரில் இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழா பேரணியில் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் ஆகியோர் தேசியக் கோடியை ஏந்தவுள்ளனர்.
இருந்தாலும் ரசிகர்கள் பலரின் கண்களும் நீரஜ் சோப்ராவை காண்பதற்கே ஆவலாக உள்ளது. ஏனென்றால் தடகளத்தில் 121 வருட கனவான தங்கப்பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைத்தவர். அதுமட்டுமல்லாமல் தங்கப் பதக்கம் வென்ற பின், ஆசியப் போட்டிகள், டைமண்ட் லீக், உலக தடகள சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கம் வென்று சாதித்துள்ளனர்.

இதன் மூலமாகவே நீரஜ் சோப்ரா இந்திய தடகளத்தின் முகமாக மாறியுள்ளார். இதனால் ஒலிம்பிக் தொடரில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்று நீரஜ் சோப்ரா மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒலிம்பிக் தொடருக்கு செல்வதற்கு முன்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் நீரஜ் சோப்ரா உரையாடல் ஒன்றை நடத்தினார்.
அந்த உரையாடலின் போது தினேஷ் கார்த்திக் ஈட்டி ஒன்றை எடுத்து எறிய முயன்றார். அப்போது ஈட்டி கனமாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறினார். அதற்கு நீரஜ் சோப்ரா, புதிதாக ஈட்டியை எடுப்பவர்களுக்கு அப்படிதான் தோன்றும். ஆனால் இதன் எடை வெறும் 800 கிராம் தான். இதன் நீளம் 260 செ.மீ. மட்டுமே இருக்கும் என்று தெரிவித்தார்.
அதேபோல், ஈட்டி எறிதலுக்கு 40 சதவிகித உடலையும், 60 சதவிகிதம் கால்களையும் பயன்படுத்த வேண்டியதாக இருக்கும். ஓடி வந்து ஈட்டியை எறியும் போது கடைசி நொடியில் காலில் நமது உடல் எடையில் 8 முதல் 10 மடங்கு கூடுதலாக கொடுத்தால் தான் ஈட்டியை தூரமாக எறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீரஜ் சோப்ரா 88 மீட்டருக்கு மேலாக 10 முறைக்கு மேல் வீசியுள்ளார். நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை கடுமையான போட்டி இருந்தாலும், 90 மீட்டருக்கு மேல் வீசினால் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியும். இதற்காக நீரஜ் சோப்ரா நீண்ட மாதங்களாக பணியாற்றி வருகிறார். டைமண்ட் லீக்கில் கூட பங்கேற்காமல் நீரஜ் சோப்ரா பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications